பவுனுக்கு ரூ.320 குறைந்தது: ரூ.92 ஆயிரமாக சரிந்த தங்கம் விலை

சென்னை: தங்கம் விலை நேற்று ரூ.320 குறைந்து, ஒரு பவுன் ரூ.92 ஆயிரத்துக்குள் வந்தது. அதே நேரத்தில் வெள்ளி விலையிலும் மாற்றம் காணப்பட்டது. தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து உயர்வை சந்தித்து வந்தது. தொடர்ந்து இந்த மாதமும் தங்கம் விலை காலை, மாலை என ஒரு நாளைக்கு 2 தடவை உயர்ந்து வரலாற்று உச்சம் கண்டது. அதுவும் தீபாவளி நெருங்கி வந்த வேளையில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்தது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தது.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி அன்று காலையில் பவுனுக்கு ரூ.2000 குறைந்து ஒரு பவுன் ரூ.95,600க்கு விற்பனையானது. மாலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.96 ஆயிரத்துக்கு விற்பனையானது. தொடர்ந்து 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. 20ம் தேதி தீபாவளியன்று தங்கம் விலை உயரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 குறைந்து ஒரு பவுன் ரூ.95,360க்கு விற்பனையானது. தொடர்ந்து 21ம் தேதி ரூ.640 உயர்ந்து ரூ.96,000க்கு விற்பனையானது. தொடர்ந்து நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்து.

அதாவது நேற்று முன்தினம் காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 குறைந்து ஒரு கிராம் ரூ.11,700க்கும் பவுனுக்கு ரூ.2,400 குறைந்து ஒரு பவுன் ரூ.93,600க்கு விற்றது. தொடர்ந்து மாலையிலும் தங்கம் விலை மேலும் குறைந்தது. மாலையில் கிராமுக்கு ரூ.160 குறைந்து ஒரு கிராம், ரூ.11,540க்கும், பவுனுக்கு ரூ.1,280ம் குறைந்து ஒரு பவுன் ரூ.92,320க்கும் விற்றது. அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் காலை, மாலை என தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,680 குறைந்தது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இதேபோல நேற்று முன்தினம் வெள்ளி விலை காலை, மாலை என கிராமுக்கு ரூ.7 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.175க்கும், கிலோவுக்கு 7 ஆயிரம் ரூபாய் குறைந்து, பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது.

நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.11,500க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.92,000க்கும் விற்பனையானது. தங்கம் விலை ஜெட் வேகத்தில் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக விலை குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. இதே போல நேற்று காலையில் வெள்ளி விலையிலும் மாற்றம் காணப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.174க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து, பார் வெள்ளி 1 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது.

Related Stories: