ஒரே நாளில் இருமுறை குறைந்த தங்கம் விலை காலை, மாலை என பவுனுக்கு ரூ.3,680 அதிரடியாக சரிந்தது: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

சென்னை: ஒரே நாளில் காலை, மாலை என இருமுறை தங்கம் விலை குறைந்து பவுனுக்கு ரூ.3,680 அதிரடியாக சரிந்ததால் அனைத்து தரப்பினர் மத்தியிலும் மகிழ்ச்சி அடைந்தனர். உலகில் தங்க சேமிப்பில் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதனால், தங்கம் விலை உயரும் போது தங்கத்தை சேமித்து வைத்திருக்கும் இந்திய குடும்பங்களின் செல்வ மதிப்பும் உயர்கிறது. திருமணம் உட்பட சுபநிகழ்வுகளில் தங்க நகைகளின் பயன்பாடு மிகமுக்கியமானதாக உள்ளது. இந்நிலையில் புதிதாக தங்க நகைகள் வாங்க நினைக்கும் மக்கள், அதன் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

ஜெட் வேகத்தில் தங்கம் உயர்ந்து வந்த நிலையில், கடந்த 8ம்தேதி ஒரு பவுன் ரூ.90 ஆயிரத்தை கடந்தது. கடந்த 17ம்தேதி ஒரு பவுன் ரூ.97 ஆயிரம் என்ற உச்சத்தையும் கடந்தது. மேலும் விலை உயருமோ? என நினைத்த நேரத்தில், அதற்கு மறுநாளே பவுனுக்கு ரூ.1,600 சரிந்து காணப்பட்டது. தொடர்ச்சியாக கடந்த 20ம்தேதி பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.95,360-க்கும் தங்கம் விற்பனையானது. இந்த விலை குறைவு தீபாவளி விற்பனைக்காக என சொல்லப்பட்ட நிலையில், அதற்கேற்றாற் போல், தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாளே தங்கம் விலை மீண்டும் எகிறியது.

இப்படி, கடந்த சில நாட்களாகவே ஒரே நாளில் ஏற்ற-இறக்கத்தை தங்கம் விலை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.1,440 குறைந்த ரூ.96 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. இந்நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக தங்கம் விலை நேற்று காலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்து ஒரு பவுன் ரூ.93,600க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.300 குறைந்து ரூ.11,700க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பவுனுக்கு ரூ.2,400 குறைந்ததால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்தனர்.

இதற்கிடையே, ஒரேநாளில் 2வது முறையாக தங்கம் விலை நேற்று மாலையும் அதிரடியாக குறைந்தது. அதன்படி, நேற்று மாலை ஒரு பவுன் தங்கம் ரூ.1,280 குறைந்து ரூ.92,320க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று, ஒரு கிராம் தங்கம் ரூ.160 குறைந்து ரூ.11,540க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் நேற்று ஒரே நாளில் காலை, மாலை என தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,680 குறைந்துள்ளது. அதேபோன்று, தங்கம் கிராமுக்கு ரூ.460 குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த சரிவு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

Related Stories: