கொடைக்கானலில் ஏரியை சீரமைக்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்

கொடைக்கானல், டிச. 29: கொடைக்கானலில் ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி, பாதுகாப்பு இயக்கத்தினர் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர். கொடைக்கானலில் உள்ள ஏரி நகரின் இதயம் போல விளங்குகிறது. இந்த ஏரி சமீபகாலமாக மாசடைந்து வருகிறது. நீர் தாவரங்கள் நிறைந்து, அதன் அழகு கெட்டு வருகிறது. ஏரியின் கரைப் பகுதிகளில் களைச்செடிகள் முளைத்துள்ளன. கரைப் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன், கழிவு படலங்கள் மிதந்து வருகின்றன. இது குறித்து சமூக ஆர்வலர்கள், வியாபார சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், நகராட்சியில் புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. பெயரளவிற்கு சில பணியாளர்கள் மூலம் களைச்செடிகளை, நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்துவதாகவும், அப்பகுதியில் மீண்டும் களைச்செடிகள் முளைப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தக்கோரி, கொடைக்கானல் ஏரி பாதுகாப்பு குழுவினர், நேற்று கொடைக்கானல் நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள காந்தி சிலை அருகே, காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இவர்களுடன் கொடைக்கானல் நகர திமுக செயலாளர் முகமது இப்ராகிம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கொடைக்கானல் டிஎஸ்பி ஆத்மநாதன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் ஏரியை தூய்மை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், பாதுகாப்பு குழுவினர் போராட்டத்தை கைவிட்டனர்.

Related Stories: