சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.2,400 உயர்ந்து, பவுன் ரூ.98 ஆயிரத்தை நெருங்கி வரலாற்று உச்சம் படைத்தது. இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, கிராம் ரூ.11,900க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, பவுன் ரூ.95,200க்கும் விற்றது.
அதே நேரத்தில் ஒரு வாரத்துக்கு மேலாக வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த வெள்ளி விலையில் நேற்று முன்தினம் மாற்றம் ஏற்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து கிராம் ரூ.206க்கும், கிலோவுக்கு ரூ.ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி 2 லட்சத்து 6 ஆயிரத்திற்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதாவது கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, கிராம் ரூ.12,200க்கும், பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ரூ.97,600க்கும் விற்றது.
இந்த விலை தங்கம் வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உச்சம் என்ற சாதனையை படைத்தது.இது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. தீபாவளிக்கு நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது. இந்த வேகத்தில் அதிகரித்தால் தீபாவளி அன்று தங்கம் பவுன் ஒரு லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.3 குறைந்துகிராம் வெள்ளி ரூ.203க்கும், கிலோவுக்கு 3 ஆயிரம் ரூபாய் குறைந்து, பார்வெள்ளி 2 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இதுகுறித்து நகை வியாபாரிகள் கூறுகையில், ”தங்கம், வெள்ளியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்த உலோகங்கள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகின்றன ” என்றனர்.
