புதுடெல்லி: இந்த மாதத்தில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி மீண்டும் அதிகரித்துள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது பெரிய நாடாகும். இந்தியா தனது உள்நாட்டு கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கும் அதிகமாக வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. 2022ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்தது. ரஷ்யாவிடமிருந்து உலக நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தவிர்க்க அமெரிக்கா கோரியது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்குவதால்தான் இந்தியா மீதான வரியை அதிபர் டிரம்ப் 50 சதவீதம் உயர்த்தினார்.
கடந்த ஜூன் மாதத்தில் ரஷ்யாவில் இருந்து தினமும் 20 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்யப்பட்டது. அதன் பிறகு செப்டம்பரில் அது 16 லட்சம் பீப்பாய்கள் என குறைந்தது. கப்பல் கண்காணிப்பு தரவு நிறுவனமான கெப்ளர் ஆய்வு அறிக்கையின் படி இந்த மாதத்தில்(அக்டோபர்) ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி 18 லட்சம் பீப்பாய்கள் என அதிகரித்துள்ளது. இது முந்தைய மாதத்தை விட 2,50,000 பீப்பாய்கள் அதிகமாகும். இது அனைத்தும் அக்டோபர் 15ம் தேதிக்கு முந்தைய தரவுகள் ஆகும். அக்டோபர் 15ம் தேதி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி தன்னிடம் உறுதியளித்ததாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விளக்கம் அளித்த ஒன்றிய அரசு கச்சா எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் நுகர்வோர் நலனே முக்கியம் என்று தெரிவித்தது.
