செங்கம், அக். 11: மேல்செங்கம் வனக்காவலர் குடியிருப்பில் ஊர்க்காவல் படைவீரர் தூக்கில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கத்தை சேர்ந்தவர் சுரேஷ்(40), இவர் மேல்செங்கம் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் மாலை இவர் செங்கம் பகுதியில் வனக்காவலர்கள் குடியிருப்பில் உள்ள அறையில் தூக்குப்போட்டு சடலமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த மேல்செங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சுரேஷ் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஊர்க்காவல் படை வீரர் இறப்புக்கு 4 பேர் மீது சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் புகார் அளித்தும் அவர்களை அழைத்து விசாரிக்கவில்லை என நேற்று மேல்செங்கம் காவல் நிலையம் முன் உறவினர்கள் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த டிஎஸ்பி ராஜன் மேல் ெசங்கம் இன்ஸ்பெக்டர் சாந்தி அந்த 4 பேரையும் அழைத்து விசாரித்து சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளித்ததின் பேரில் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இன்று சுரேஷின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்து அதன் தொடர்ச்சியாக விசாரணை மற்றும் அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
