×

திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: சட்டப்பேரவை தேர்தல் பணி குறித்து ஆலோசனை

சென்னை: திருப்போரூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். அப்போது சட்டப்பேரவை தேர்தல் பணிகள் தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், “உடன் பிறப்பே வா” என்ற தலைப்பில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த ஜூன் 13ம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் நிர்வாகிகளை தனித்தனியே அழைத்து பேசினார். இதில் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது சட்டப்பேரவை தொகுதி நிலவரம் வெற்றி நிலவரம், கட்சி வளர்ச்சி பணி, ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார்.

கட்சியின் நிர்வாகிகள் செயல்பாடுகளை முழுமையாக கையில் வைத்துக் கொண்டு, அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது குறித்தும் கேட்டறிந்தார். அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் முழுமையாக ெசன்றடைகிறதா? தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் கேட்டறிந்தார். அப்போது அரசின் திட்டங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடைந்துள்ளது. ஒரு வீட்டில் ஒருவர், இருவர் என அரசின் திட்டங்கள் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

அதாவது, மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை திட்டம், மாணவர்களுக்கான ரூ.1000 உதவி வழங்கும் திட்டத்தால் பயனடைந்து வருகிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இதனை முதல்வர் ஆர்வமுடன் அவர்களிடம் கேட்டறிந்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும். 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி வாகை சூடி மீண்டும் திமுக ஆட்சி அமைய உறுதி ஏற்க வேண்டும் என்றும் அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். மேலும் தன்னை சந்தித்த அனைத்து நிர்வாகிகளுக்கும் புத்தகங்களை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Tags : Chief Minister ,MK Stalin ,DMK ,Tiruporur assembly ,Chennai ,Anna Arivalayam ,President ,
× RELATED திண்டுக்கல் கருப்பண்ணசாமி கோயிலில்...