ஆவுடையார்கோவில் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு உறவினர்கள் மறியல்

அறந்தாங்கி, டிச.24: ஆவுடையார்கோவில் அருகே கருங்காட்டில் விவசாயியை அரிவாளால் வெட்டியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆவுடையார்கோவிலை அடுத்த கருங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு கருங்காடு சாய்பாபா கோயில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் அய்யனாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் அய்யனாரை அரிவாளால் வெட்டிய ரவுடி கும்பலை கைது செய்யாத காவல்துறையை கண்டித்தும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும், அறந்தாங்கியை அடுத்த நாகுடியில் முத்தரையர் முன்னேற்ற சங்கம், அறந்தை நமது உறவுகள் அமைப்பினர் மற்றும் அய்யனாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் அறந்தாங்கி போலீஸ் டிஎஸ்பி ஜெயசீலன், நாகுடி எஸ்.ஐ ராஜேந்திரன், சிறப்பு எஸ்.ஐ சண்முகம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியல் காரணமாக அறந்தாங்கி-கட்டுமாவடி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: