குழந்தை நேச காவல் நிலையம் திறப்பு குழந்தைகளுடன் விளையாடிய டிஐஜி, எஸ்பி

பட்டுக்கோட்டை, டிச. 23: தஞ்சை சரகத்தில் முதல்முறையாக பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய வளாகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே குழந்தைநேச காவல் நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. முன்னதாக போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு டிஐஜி ரூபேஷ்குமார் மீனா மற்றும் எஸ்பி தேஷ்முக்சேகர் சஞ்சய் ஆகியோருக்கு குழந்தைகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். குழந்தைகள் நேச காவல் நிலையத்தை தஞ்சை சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா திறந்து வைத்தார். இதைதொடர்ந்து நகர காவல் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் ஷெட் இந்தியா நிர்வாக இயக்குனர் பதிமராஜ் வரவேற்றார். தஞ்சை எஸ்பிதேஷ்முக்சேகர் சஞ்சய் சிறப்புரையாற்றினார். சென்னை ஐ.ஜே.எம். பார்ட்னர் கேஸ்வொர்க் தலைவர் பிரீத்திடேனியல் விளக்க உரையாற்றினார். மாவட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ரவீந்திரன் கூறினார்.

இதைதொடர்ந்து தஞ்சை சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, எஸ்பி தேஷ்முக்சேகர் சஞ்சய் ஆகியோர் குழந்தைகளுடன் விளையாடினார். இறுதியாக நகர காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள், ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து டிஐஜி ரூபேஸ்குமார் மீனா நிருபர்களிடம் கூறுகையில், இந்த குழந்தை நேச காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்க வரக்கூடிய பொதுமக்களுடைய குழந்தைகள் விளையாடக்கூடிய அளவில் விளையாட்டு உபகரணங்களும், படிப்பதற்கு பாடப்புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்காக காவல்துறை எப்போதும் செயல்படும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் இந்த நேச காவல் நிலையம் செயல்படும் என்றார்.

Related Stories: