சென்னை :’நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், இத்திட்டத்திற்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதே போன்ற வழக்கை ஏற்கனவே உச்சநீதிமன்றம் அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளதாக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தெரிவித்தார். இதனையடுத்து, மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதே போல் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு எதிரான வழக்கையும் தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரரான அதிமுக வழக்கறிஞர் இனியனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
