பாடாலூர், ஆக. 11: ஆலத்தூர் தாலுகா விஜயகோபாலபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோயிலில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா விஜயகோபாலபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாதத்தையொட்டி ஏராளமான பக்தர்கள், பெண்கள் மாரியம்மன் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்தடைந்தனர்.
பின்னர் மாரியம்மன் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விஜயகோபாலபுரம் கிராமபொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.
