பெரம்பலூர், டிச. 22: பெரம்பலூரில் மழை மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட பயிர்கள் பற்றி கணக்கெடுப்புசெய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். பெரம்பலூரில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமியின் 41ம் ஆண்டு நினைவுதினம் பெரம்பலூர் மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலுள்ள உழவர் பெருந்தலைவர் நாராயண சாமி சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் சார்பாக மாவட்ட தலைவர் நீலகண்டன் மாலை அணிவித்தார். பின்பு விவசாயிகள் நாராயணசாமி சிலைக்கு மலரஞ்சலியும், அவரது தியாகத்தினை போற்றும் வகையில் மவுன அஞ்சலியும் செலுத்தினர்.
அதனையடுத்து விவசாயிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் மழை மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம், மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் பற்றி முறையாக கணக்கெடுப்புசெய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கிடவும், பயிர் காப்பீட்டு இழப்பீடு வழங்கிட வலியுறுத்தியும், விவசாயிகள் பாரம்பரிய விதை உற்பத்தி மற்றும் பகிர்வதை பாதிக்கும் வகையிலும், பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள விதைச்சட்டம் 2025ஐ கைவிட வலியுறுத்தியும் கோரிக்கை முழக்கமிட்டனர்.
நிகழ்ச்சிக்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட பொருளாளர் மணி, திருச்சி மாவட்ட செயலாளரும், பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவருமான கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்லக்கருப்பு, ராமசாமி, செல்லப்பிள்ளை உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
