×

பெரம்பலூர் மாவட்டத்தில் 1,009 பேர் எஸ்ஐ தேர்வு எழுதினர்

பெரம்பலூர், டிச. 22: பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற எஸ்ஐ தேர்வை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுவாரியம் சார்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் 2025ம் ஆண்டிற்குரிய சட்டம் ஓழுங்கு, ஆயுதப்படை சப்-இன்ஸ் பெக்டர் பதவிகளுக்கான பொது தேர்வு நேற்று பெரம்பலூர் அருகே துறையூர் சாலையில் அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றது. தேர்வை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட எஸ்பி.ஆதர்ஷ் பசேரா தலைமையில் 80 போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 1,425 தேர்வர்கள் இந்தத் தேர்வினை எழுத அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 8:15 மணியில் இருந்து 9.30 மணி வரை தேர்வு எழுதுபவர்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை 8 மணி முதல் ஆண், பெண் தேர்வர்கள் தேர்வு வளாகம் முன்பு துறையூர் சாலையில் திரண்டனர். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின் படி, ஏடிஎஸ்பி கோபாலச்சந்திரன் மேற்பார்வையில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக 2 வரிசைகளில் வரவழைக்கப் பட்டு மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதித்து, டோர் ஃபிரேம் டிடெக்டர் வழியாக மெயின் கேட்டிலிருந்து தேர்வு அறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காலையில் ஒரு கட்டமாகவும், மதியம் ஒரு கட்டமாகவும் என 2 கட்டங்களாகத் தேர்வுகள் நடைபெற்றது. மாலை 5:30 மணி வரை நடைபெற்ற இந்த தேர்வில் நேற்று 1,009 பேர்கள் கலந்து கொண்டனர். 292 ஆண்கள், 125 பெண்கள் என 416 பேர் தேர்வுக்கு வரவில்லை.

தேர்வு மையத்தினை சென்னை (காவலன் நலன் பிரிவு) ஐஜி சத்தியபிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். செல்போன், கடிகாரம் மற்றும் எலக்ட்ரானிக்கல் டிவைஸ் சம்பந்தப்பட்ட எந்த பொருட்களும் தேர்வு வளாகத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. காலையில் இருந்து மாலை 5:30 மணி வரை தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் இருக்க வேண்டும் என்பதால் மதிய உணவுக்காக 200 ரூபாய் மட்டும் கையில் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டனர். தேர்வு முடிந்த பிறகு தேர்வர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தேர்வு மைய வளாகத்திலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Tags : Perambalur district ,Perambalur ,Tamil Nadu Uniformed Services Selection Board ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 49,548 வாக்காளர்கள் நீக்கம்