- எறையூர் சர்க்கரை ஆலை
- பெரம்பலூர்
- ஜவஹர்லால் நேரு சர்க்கரை ஆலை
- எறையூர்
- வேப்பந்தட்டை தாலுகா
- பெரம்பலூர் மாவட்டம்
- ஜவஹர்லால் நேரு...
பெரம்பலூர், டிச. 18: எறையூர் ஜவஹர்லால் நேரு சர்க்கரை ஆலையில் இன்று முதல் அரவைப் பணிகள் தொடங்கும் நிலையில் 75 நாட்களில், 1.5 லட்சம் டன் கரும்புகளை அரைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் பகுதியில், ஜவஹர்லால் நேரு பொதுத்துறை சர்க்கரை ஆலை உள்ளது. சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகியான, டிஆர்ஓ பன்னீர்செல்வம் தலைமையில் நடப்பு(2025-2026) ஆண்டுக்கான அரவைப் பணிகளுக்காக ஆலை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் எறையூர், பெரம்பலூர், மருதையான் கோவில், புதுவேட்டக்குடி, அகரம் சிகூர், நாவலூர், கிருஷ்ணாபுரம், வி.களத்தூர், தாமரைப்பூண்டி ஆகிய 9 சர்க்கரைக் கோட்டங்கள் உள்ளன. இந்த 9 சர்க்கரை கோட்டங்களில் 5150 ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இதில் 1,50,000 டன் கரும்புகள் எறையூர் சர்க்கரை ஆலையில் அரைக்க பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இன்று தொடங்கி, 75 நாட்கள் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள உடும்பியம் தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ள 20 ஆயிரம் டன் கரும்புகளும் பின்னர் அரவைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் எறையூர் ஆலையில் முன்பதிவு செய்து, கரும்பு வெட்டவிருக்கும் விவசாயிகள் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். வாகன வாடகை உயர்த்த வேண்டும். கரும்பைத் தாக்கும் பொக்கோபோயிங் நோயால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும். கரும்பு கொண்டு செல்வதற்கான சாலைகளை, ஆலை வளாக சார்பில் மேம்படுத்திட வேண்டும். கரும்பு வெட்டும் போது விவசாயிகளுக்கு முன்பணம் தாமதம் இல்லாமல் வழங்கிட வேண்டும். கரும்பு ஏற்றும் வாகனங்களுக்கு பராமரிப்புக்கு முன்பணம் வழங்க வேண்டும். வெட்டுக் கூலியை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். டன்னுக்கு ரூ.4000 கரும்புப் பணம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கரும்பு வெட்டவிருக்கும் விவசாயிகள், ஆலை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.
