ரூ.22 கோடி முதலீடு பணம் மோசடி இரண்டு போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்

சென்னை: காஞ்சிபுரத்தில் போலீசார் மற்றும் பொதுமக்களிடம் ஸ்கிராப், கரன்சி எக்சேன்ஜ், டிரீம்11 போன்றவை மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தை கூறி, குடும்பத்தின் உதவியுடன் பண மோசடியில் ஈடுபட்ட 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் சங்கரன் (29). இவருக்கும், ஏனாத்தூர் புதுநகரை சேர்ந்த காவலர் ஆரோக்கிய அருணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பழக்கத்தின் அடிப்படையில் காவலர் ஆரோக்கிய அருண், தங்களின் குடும்பத்தை சேர்ந்த மூத்த சகோதரர் சகாய பாரத், இளைய சகோதரர் இருதயராஜ், கசாயபாரத் மனைவி சவுமியா, இருதயராஜ் மனைவி ஜெயஸ்ரீ, தன்னுடைய மனைவி மகாலட்சுமி மற்றும் பெற்றோர்கள் என ஒவ்வொருவர் பெயரிலும் வெவ்வேறு தொழில் செய்து வருகிறோம். அதில் தன் மனைவி மகாலட்சுமி ஸ்கிராப் தொழில் செய்து அதிக லாபம் சம்பாதித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதனால், ஸ்கிராப் தொழிலில் முதலீடு செய்தால், அதிக அளவில் லாபம் பார்க்கலாம் என சங்கரனை மூளைச்சலவை செய்துள்ளார். எனவே, சங்கரன் 10 தவணைகளில் ரூ.3 கோடி 10 லட்சம் பணத்தை, ஆரோக்கிய அருணிடம் கொடுத்துள்ளார்.

ஆனால், பேசியபடி பணம் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது.இதேபோன்று, காஞ்சிபுரத்தை சேர்ந்த சுகுமாரிடம் (டிரீம் 11) என்ற ஆன்லைன் சூதாட்டத்தில் முதலீடு செய்து வருமானத்தை பெருக்கி தருவதாக கூறி ரூ.3 கோடி பணத்தையும், ஸ்ரீபெரும்புதூர் போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரியும் யுவராஜ்யிடம் ரூ.5 கோடியே 5 லட்சமும், காவலர் மனோகரிடம் இருந்து ரூ.11 கோடியே 5 லட்சமும், காஞ்சிபுரத்தை சேர்ந்த வேல்முருகனிடம் ரூ.2 கோடியே 5 லட்சமும் என சுமார் ரூ.22 கோடிக்கு மேல் பலரிடமிருந்து பணத்தை பெற்று ஏமாற்றி உள்ளார்.

இதனைதொடர்ந்து, சங்கரன் அளித்த புகாரின்பேரில், டிஎஸ்பி சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். அதில், இதேபோன்று பலரிடம் பணமோசடியில் ஆரோக்கிய அருண் ஈடுபட்டதும், அதற்கு உறுதுணையாக அவரின் குடும்பத்தினர் இருந்ததும் தெரியவந்தது. மேலும், பணமோசடியில் ஈடுபட்ட இருதயராஜ், அவரின் மனைவி ஜெயஸ்ரீ, சகாயபாரத், அவரின் மனைவி சவுமியா, தாய் மரியசெல்வி, ஆரோக்கிய அருண், அவரின் மனைவி மகாலட்சுமி, தந்தை ஜோசப் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் போக்குவரத்து காவல் துறையில் இருந்த ஆரோக்கிய அருண், மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணியாற்றிய சகாயபாரத் ஆகிய 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் இருதயராஜ் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி எழுத்துப்பூர்வமாக பரிந்துரை செய்ததாக, மாவட்ட எஸ்பி அலுவலக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

The post ரூ.22 கோடி முதலீடு பணம் மோசடி இரண்டு போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: