×

நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை காங்.மேலிட பார்வையாளர் இன்று புதுச்சேரி வருகை

புதுச்சேரி,  டிச. 4: புதுச்சேரி மாநில காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ்  இன்று(4ம் தேதி) புதுச்சேரி வருகிறார். 2 நாள் முகாமிடும் அவர், கட்சி நிர்வாகிகளுடன்  சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.  தமிழகம், புதுவையில் சட்டமன்ற பொதுத்தேர்தல் ெநருங்கிவரும் நிலையில்,  கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, பிரசார கூட்டங்கள் உள்ளிட்ட  பணிகளில் அரசியல் கட்சிகள் இப்போதே முனைப்பு காட்டி வருகின்றன. காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி 1ம்தேதி ஆலோசனை நடத்தினார்.  இதற்கிடையே நேற்று முன்தினம் தமிழகம் வந்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்  தினேஷ் குண்டுராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.  அப்போது ராகுல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென அவருக்கு அழைப்பு  விடுத்தார். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் பணிகள் சம்பந்தமாக புதுச்சேரி மாநில  காங்கிரஸ் நிர்வாகிகளுடன்  ஆலோசிக்க அக்கட்சியின் மேலிட  பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று  (4ம் தேதி) காலை சென்னையில் இருந்து புதுச்சேரி வருகிறார்.

மாநில காங்கிரஸ்  கட்சி அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்  பங்கேற்று முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மட்டுமின்றி மாநில  நிர்வாகிகள், மாவட்ட, வட்டார தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளிடம்  கருத்துகளை கேட்கிறார். அப்போது புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் களப்பணி,  ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் குறித்து விவாதிக்க உள்ளார்.  அதன்பிறகு இன்று இரவு புதுச்சேரியில் தங்கி ஓய்வெடுக்கும் அவர், நாளை (5ம்தேதி) காலை  10 மணிக்கும் தொடர்ந்து கட்சியினரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.  பின்னர் சென்னை புறப்பட்டு செல்லும் அவர், அங்கிருந்து பெங்களூர்  சென்றடைகிறார். அவரது புதுச்சேரி வருகையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி  உறுப்பினர் சத்யன் புதூர் உறுதி செய்துள்ள நிலையில், புதுச்சேரி  காங்கிரசார் இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கனமழையையும் பொருட்படுத்தாமல்  தீவிரமாக செய்து வருகின்றனர். ஏற்கனவே மாநில கட்சித் தலைமையானது,  தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி  வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Administrators Cong ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை