சென்னை: திருக்கோயில்களுக்கான மானியத்தொகை அறிவிப்பின்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களை நிர்வகிக்க மற்றும் பராமரிக்க ரூ.8 கோடிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை, தலைமைச்செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக தற்போது வழங்கப்பட்டு வரும் அரசு மானியத்தை ரூ.6 கோடியிலிருந்து ரூ.8 கோடியாக உயர்த்தி அதற்கான காசோலையை குமரி மாவட்ட கோயில்களின் அறங்காவலர் குழுத் தலைவர் ராமகிருஷ்ணனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அதேபோல், ஒருகால பூஜைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் மற்றும் மகள்களின் மேற்படிப்பிற்கு உயர்கல்வித் தொகையினை 400 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவர்களுக்கு அதற்கான வங்கி வரைவோலைகளையும், திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகையை முறையே ரூ.4 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் மாக உயர்த்தி 292 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவர்களுக்கு அதற்கான வங்கி வரைவோலைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் திருமகள், ஹரிப்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர். 2023 – 2024ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டத்தின் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில்கள் நிர்வாகச் செலவினங்களுக்காக தற்போது ரூ.6 கோடி வழங்கப்பட்டு வருகிறது.
இத்தொகை குறைவாக உள்ள காரணத்தால் திருக்கோயில்கள் நிர்வாக செலவினங்களுக்காக வழங்கப்படும் அரசு மானியத் தொகை இந்தாண்டு ரூ.6 கோடியிலிருந்து ரூ.8 கோடியாக உயர்த்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 490 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக அரசு மானியமாக ரூ.8 கோடிக்கான காசோலையினை முதல்வர் வழங்கியுள்ளார். அதேபோல், 2023 -24ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், “ஒரு கால பூஜை திட்ட திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் பிள்ளைகளின் நலன் கருதி மேற்படிப்பிற்கு ஆண்டொன்றுக்கு 400 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட மைய நிதி ஏற்படுத்தப்படும்” எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஒருகால பூஜைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் மற்றும் மகள்களின் மேற்படிப்பிற்கான உயர்கல்வித் தொகையினை 400 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவர்களுக்கு அதற்கான வங்கி வரைவோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். இதனால் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம் மற்றும் உயர்கல்வி பயிலும் அர்ச்சகர்களின் பிள்ளைகள் பயன்பெறுவர். இதேபோல், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க முன்னோடி திட்டத்தை கொண்டுவந்த கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சி பள்ளிகளில் முழு நேரம் மற்றும் பகுதி நேரம் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகையை முறையே ரூ.4 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரமாக உயர்த்தி 292 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவர்களுக்கு அதற்கான வங்கி வரைவோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். இதன்மூலம் முழுநேர பயிற்சி பெறும் 212 மாணவர்களும், பகுதிநேர பயிற்சி பெறும் 80 மாணவர்களும், என மொத்தம் 292 மாணவர்கள் பயன்பெறுவர்.
The post கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில்கள் நிர்வாகம், பராமரிப்புக்கு ரூ.8 கோடி காசோலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.