தமிழர்களுக்கு 80% வேலை சட்டத்தை உடனே மாநில அரசு நிறைவேற்ற வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தமிழர்களுக்கு 80% வேலை சட்டத்தை உடனே மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் செயல்படும் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை உள்ளிட்ட 8 கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மேற்கொண்டு வந்த நிலையில், தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்ற பேச்சுகளில் சாம்சங் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களில் ஒரு பிரிவினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களில் இன்னொரு பிரிவினர் வேலை நிறுத்தத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ளனர். உண்மையில் சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. மாறாக தொழிலாளர்களிடையே பிரிவினை ஏற்படுத்தப்பட்டு, சாம்சங் நிறுவன நிர்வாகம் தப்ப வைக்கப்பட்டுள்ளது. சாம்சங் தொழிலாளர்கள் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டிய கடமை அரசுக்கு இருந்த நிலையில், தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற உறுதுணையாக இருந்திருக்க வேண்டும்.

சாம்சங் தொழிலாளர்கள் கோருவதும் 8 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை போன்ற நியாயமான கோரிக்கைகள் தான். தொழிலாளர்களின் பக்கம் அரசு நின்றிருந்தால், அந்த கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் ஏற்றுக் கொண்டிருக்கும். வேலை நிறுத்தத்தைத் தொடரும் சாம்சங் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதற்கு அரசு துணை நிற்க வேண்டும். அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கு வழங்குவதற்கான சட்டத்தை உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

The post தமிழர்களுக்கு 80% வேலை சட்டத்தை உடனே மாநில அரசு நிறைவேற்ற வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: