8 சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

ஈரோடு, ஆக. 24: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதகிளில் 2024ம் ஆண்டு தேர்தலையொட்டி மறு சீரமைப்புக்கான வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியலை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையம் 2024ம் ஆண்டு தேர்தலுக்கான சிறப்பு சுருக்க திருத்த பணிக்கு முன் மேற்கொள்ள வேண்டிய பணிகளில் ஒரு பகுதியாக வாக்குச்சாவடி மையங்கள் மறு சீரமைப்பு பணியினை மேற்கொள்ள ஏதுவாக புதிய பாகங்கள் அமைத்தல், வாக்குச்சாவடியை இடமாற்றம் செய்தல், வாக்குச்சாவடியை வேறு கட்டிடத்திற்கு மாற்றம் செய்தல் மற்றும் வாக்குச்சாவடி பெயர் திருத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியது.

இதன்பேரில், ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2024ஐ முன்னிட்டு வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு குறித்தான மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகள் முன்னிலையில் ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டார். இதைத்தொடர்ந்து கலெக்டர் பேசுகையில் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 951 இடங்களில் 2,222 வாக்குச்சாவடிகள் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் படி உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கருத்துருக்கள் கோரப்பட்டு, அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வாக்குச்சாவடிகள் குறித்து தங்களுக்கு ஏதேனும் கோரிக்கைகள் ஆட்சேபனைகள் இருப்பின் எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலருக்கோ, உதவி வாக்காளர் பதிவு அலுவலருக்கோ அல்லது மாவட்ட தேர்தல் அலுவலருக்கோ 7 நாட்களுக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டது.

மேலும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு பணி மேற்கொள்வதற்கு முன்பாக தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளையும் நேரடியாக தணிக்கை செய்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, சாய்வுதளம், மின்சார வசதி மற்றும் கட்டிட உறுதித்தன்மை உள்ளதை உறுதி செய்திட வேண்டும். ஏற்கனவே உள்ள வாக்குச்சாவடிகள் ஏதேனும் பழுதடைந்த நிலையிலோ அல்லது பழமையான கட்டிடமாக இருக்கும் பட்சத்தில், அருகாமையில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு பள்ளி தனியார் பள்ளி கட்டிடம், அரசு கட்டிடங்களை கண்டறிந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடம் ஒப்புதல் பெற்று முன் மொழிவுகள் அனுப்பி வைக்க வேண்டும்.

நகர் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளும் 1,500க்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்டுள்ள பாகங்களை இரண்டு பாகங்களாக பிரித்திடவும், அனைத்து வாக்குச்சாவடிகளும் இருபாலர்களுக்கான வாக்குச்சாவடிகளாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும். தேர்தல் காலத்தில் வாக்குச்சாவடி மையங்கள் தொடர்பான புகார்கள் ஏதும் எழாத வண்ணம் வாக்குச்சாவடி மையங்கள் தேர்வு செய்து, முன் மொழிவுகள் அனுப்பிட வேண்டும். வரைவு வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு மேற்கொண்டு, அந்த பட்டியலை இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால் வருகிற 28ம் தேதிக்குள் மறு சீரமைப்பு பணிகள் முடித்திட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறினார்.

நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் சதீஸ்குமார் (ஈரோடு), பிரியதர்ஷினி (கோபி), தேர்தல் தாசில்தார் சிவசங்கர், ஈரோடு தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post 8 சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: