நாடு திரும்புவதற்காக சூடான் துறைமுகத்தில் 500 இந்தியர்கள் தயார்: ஜெய்சங்கர் தகவல்

புதுடெல்லி: இந்தியா அழைத்து வருவதற்காக, சூடான் துறைமுகத்திற்கு 500 இந்தியர்கள் பத்திரமாக கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அங்கு மீட்பு கப்பல் தயார் நிலையில் இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவ படைகளுக்கும் இடையேயான உள்நாட்டு போர் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் அங்குள்ள வெளிநாட்டவர்கள் மற்றும் தூதர்களை வெளியேற்ற அந்தந்த நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. சூடானில் சிக்கியிருக்கும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வர ஒன்றிய அரசு ‘ஆபரேஷன் காவேரி’ என்ற பெயரில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக ஐஎன்எஸ் சுமேதா மீட்பு கப்பல் சூடான் துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதே போல, விமானப்படையின் சி-130ஜே 2 ராணுவ போக்குவரத்து விமானங்கள் சவுதியின் ஜெட்டா நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 500 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு சூடான் துறைமுகத்திற்கு நேற்று அழைத்து வரப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். அந்நாட்டில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்டு வரும் பணிகள் தொடர்ந்து நடப்பதாகவும் அனைவரும் பத்திரமாக தாய்நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார்.

* பிரான்ஸ், சவுதி நாடுகளும் உதவி
இதற்கிடையே, மனிதாபிமானம் மற்றும் நட்புறவு அடிப்படையில், பிரான்ஸ், சவுதி அரேபியா நாடுகளும் சூடானில் இருந்து இந்தியர்களை மீட்டுள்ளன. டெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘சூடானில் இருந்து 2 விமானங்கள் மூலம் இந்தியா உட்பட 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்’ என தெரிவித்துள்ளது. இதில் இந்தியர்கள் 5 பேர் ஆவர். இதே போல சவுதி அரேபியாவும் இந்தியர்கள் உட்பட 66 பேரை மீட்டு வந்துள்ளதாக கூறி உள்ளது. சூடானில் கடந்த 11 நாட்களாக நடக்கும் உள்நாட்டு போரில் 400 பேர் வரை பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post நாடு திரும்புவதற்காக சூடான் துறைமுகத்தில் 500 இந்தியர்கள் தயார்: ஜெய்சங்கர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: