×

50 ஆயிரம் முகாம்களில் சனிக்கிழமை 6வது மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு வரும் சனிக்கிழமை 6வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடமாடும் பல் மருத்துவ வாகனத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்துகொண்டார்.பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பல் மருத்துவமனையில் இன்று புதியதாக பல் மருத்துவ சேவைக்கு ஒரு வாகனம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் சென்னையில் செவ்வாய், வியாழன் கிழமைகளில் மக்களை தேடி பல் மருத்துவச்சேவையை மேற்கொள்ள உள்ளார்கள். நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பிற்கு பிறகு பள்ளி தலைமையாசிரியர்களிடம் பேசி, பெற்றோர்களை ஒருங்கிணைத்து பள்ளிகளுக்கும் இந்த வாகனத்தை அனுப்பி மாணவர்களுக்கு மருத்துவ சேவை செய்யப்பட உள்ளது.இச்சேவை எந்த அளவிற்கு வரவேற்பை பெறுகிறது என்பதை பொறுத்து அடுத்தடுத்த ஆண்டுகளில் கூடுதல் வாகனம் வாங்க முயற்சி மேற்கொள்ளப்படும். பல் மருத்துவமனை கல்லூரிக்கு கூடுதல் கட்டிடங்கள் வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, முதல்வரின் கவனத்திற்கு இது கொண்டுசெல்லப்பட்டு கல்லூரியின் கோரிக்கை நிறைவேற்றித்தர முயற்சி மேற்கொள்ளப்படும்.தமிழகத்தில் 2 பல் மருத்துவ கல்லூரிகள் தான் அரசின் சார்பில் இயங்கி வருகிறது. விருதுநகர், புதுக்கோட்டையில் பல் மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. தமிழக அரசின் தடுப்பூசி போடும் பணியை பாராட்டி ஒன்றிய அரசு தடுப்பூசிகளை விரைந்து அளித்து வருகிறது. அந்தவகையில், இன்று 53,61,729 தடுப்பூசிகள் நம்மிடம் கையிருப்பு உள்ளது. மெகா தடுப்பூசி முகாம் பெரிய அளவில் விழிப்புணர்வு பெற்றுள்ளது. இதனால், பல லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இந்தவாரம் 6வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 50 ஆயிரம் முகாம்களின் மூலம் இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக சனிக்கிழமை 6வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை வாரந்தோறும் அதிகரித்து வருகிறது. 5வது முகாமை பொறுத்தவரையில் 11 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள். இந்த வாரம் நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாமில் 30,42,509 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 67 சதவீதம் பேர் முதலாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். ஆனால், 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 25 சதவீதம் பேர் மட்டுமே. எனவே, 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். வரும் புதன்கிழமை தலைமை செயலாளர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் இதுகுறித்த கூட்டம் நடைபெற உள்ளது. எல்லா ஊராட்சிகளிலும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் மட்டும் 2,500 முகாம்கள் நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்….

The post 50 ஆயிரம் முகாம்களில் சனிக்கிழமை 6வது மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : vaccination ,Minister ,M. Subramanian ,Chennai ,6th ,Mega Vaccination ,Tamil Nadu ,M.Subramanian ,
× RELATED சொந்த-பந்தம் இன்றி ஆதரவற்று தெருவில்...