சிவகங்கை : சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு சூப்பர் பாஸ்பேட் உரங்கள் இருப்பு குறித்து சிவகங்கை டான்பெட் குடோனில் வேளாண்மை இணை இயக்குநர்(பொ) லட்சுமி பிரபா ஆய்வு செய்தார்.இது குறித்து அவர், சிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்திடும் விவசாயிகள் பெரும்பாலும் டிஏபி உரங்களையே அடியுரமாக பயன்படுத்துகின்றனர்.
டிஏபி உரங்கள் தயாரிப்பு செய்வதற்கு தேவைப்படும் முக்கிய மூலப்பொருளான பாஸ்பாரிக் அமிலத்தின் விலை அதிகரித்து வருவதால், டிஏபி உரங்கள் தற்போது உள்நாட்டில் அதிகமாக தயார் செய்யப்படுவதில்லை. அதனால் டிஏபி உரங்களின் விற்பனையும் குறைவாகவே உள்ள நிலையில், டிஏபி உரங்கள் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் டிஏபி உரங்கள் சில நேரங்களில் மாவட்டங்களுக்கு துறைமுகங்களிலிருந்து அனுப்புவதில் கால தாமதம் ஏற்படுகின்றன. எனவே டிஏபி உரங்களுக்கு பதிலாக விவசாயிகள் என்.பி.கே காம்ப்ளக்ஸ் உரங்களை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். மிகவும் எளிமையாக கிடைத்திடும் என்.பி.கே காம்ப்ளக்ஸ் உரத்தில் பயிருக்கு தேவையான தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகள் அதிகமாக உள்ளது.
சூப்பர் பாஸ்பேட் உரங்களில் பாஸ்பரஸ் சத்துடன் சேர்த்து கூடுதலாக சல்பர் மற்றும் கால்சியம் ஆகிய இரண்டாம் நிலை சத்துகளும் பயிருக்கு கிடைக்கின்றன. மேலும் சூப்பர் பாஸ்பேட உரம் உள்நாட்டிலேயே தயார் செய்யப்படுவதால், அதன் விலையும் குறைவாக உள்ளது. எனவே விவசாயிகள் அதிக விலையில் விற்பனை செய்யப்படும் டிஏபி உரங்களுக்கு பதிலாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் என்.பி.கே காம்ப்ளக்ஸ் உரங்களை பெற்று பயன்பெறுமாறு விவசாயிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் மாவட்டத்தில் தற்போது யூரியா 4600 மெட்ரிக் டன், டிஏபி 988 மெட்ரிக் டன், பொட்டாஷ் 455 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 2072 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 360 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, சிவகங்கை வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுபாடு) பரமேஸ்வரன் மற்றும் சிவகங்கை டான்பெட் மண்டல மேலாளர் ஜீவா உடனிருந்தனர்.
The post சிவகங்கை மாவட்டத்தில் 4,600 மெட்ரிக் டன் யூரியா கையிருப்பு appeared first on Dinakaran.