×

4 பாடப்பிரிவுகள் அறிமுகம்: திசையன்விளை ஐடிஐல் மாணவர்கள் சேர்க்கை

நெல்லை, ஜூலை 19: திசையன்விளை ஐடிஐயில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு வெளியிட்ட அறிக்கை: ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திசையன்விளையில் நடப்பு கல்வியாண்டில் புதிதாக அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ) தொடங்குவதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். புதிதாக தொடங்கப்படும் திசையன்விளை ஐடிஐயில் தற்போது மாணவ, மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது. திசையன்விளையில் ஐடிஐயில் நடப்பு கல்வியாண்டு முதல் 4 தொழிற்பயிற்சி பிரிவுகள் தொடங்கப்படுகின்றன. இவற்றில் மரைன் பிட்டர், வெசல் நேவிகேட்டர் என்ற 2 பிரிவுகள் கப்பல் கட்டும் தொழிலை அடிப்படையாகக் கொண்டது. இவை தவிர, மின்சார வாகன மெக்கானிக், வெல்டர் பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த 4 தொழிற்பயிற்சி பிரிவுகளில் வெல்டர் பயிற்சி மட்டும் ஓராண்டு படிப்பு ஆகும். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் இதில் சேரலாம். மற்ற 3 பாடப்பிரிவுகளும் இரண்டு ஆண்டு படிப்புகளாகும். அவற்றில் சேருவதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் 14 வயது முதல் 40 வயது வரை உள்ள ஆண்கள் சேரலாம். பெண்களை பொறுத்தவரை வயது உச்சவரம்பு கிடையாது. 14 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் சேரலாம். இந்த ஐடிஐயில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.750 வீதம் ஆண்டுக்கு ரூ.9 ஆயிரமும், தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரமும் சேர்த்து மொத்தம் ஆண்டுக்கு ரூ.21 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும். மேலும், 2 செட் இலவச சீருடைகள், இலவச \”ஷு\”, இலவச வரைப்படக்கருவிகள், இலவச மிதிவண்டி மற்றும் இலவச பஸ் வசதியும் அளிக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாது, இந்த பிரிவுகளை வெற்றிகரமாக படித்து முடிப்பவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் மாதம் ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை ஊதியத்தில் வேலைவாய்ப்பு கிடைப்பது உறுதி செய்யப்படும். அதற்கான ஏற்பாடுகளை ஐடிஐ நிர்வாகம் மேற்கொள்ளும். எனவே, தகுதியுடைய மாணவ, மாணவிகள் இந்த அரிய வாய்ப்புகளை தவறவிடாமல், உடனடியாக ‘முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், இடையன்குடி பஞ்சாயத்து வளாகம், 3/53-1, தெற்கு மெயின் ரோடு, இடையன்குடி, திசையன்விளை தாலுகா, திருநெல்வேலி மாவட்டம் – 627651’ என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு ஐடிஐ முதல்வர் முத்துசாமியை 88384 73273 என்ற செல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

The post 4 பாடப்பிரிவுகள் அறிமுகம்: திசையன்விளை ஐடிஐல் மாணவர்கள் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : Vector IDIL ,Nella ,Vector IDI ,Speaker ,Tamil Nadu Pawu ,Government Vocational Training Centre ,IRC ,Radhapura Assembly Constituency ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...