300 ஆண்டு பழமையான முத்தையா கோயில் கும்பாபிஷேகம்: பரமக்குடியில் நடந்தது

 

பரமக்குடி, பிப். 3: பரமக்குடி நகரில் உள்ள 300 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான முத்தையா கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பரமக்குடி நகரின் ஆதி கிராமமாக கருதப்படும் காட்டுப்பரமக்குடி நகரின் ஒரு பகுதியாக உள்ளது. இங்கு 300 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த முத்தையா சுவாமி கோயில் உள்ளது. காட்டுபரமக்குடி மக்கள் காவல் தெய்வமாகவும், பரமக்குடி மக்கள் எல்லை தெய்வமாகவும் முத்தையா சுவாமியை வணங்குகின்றனர். இந்த கோயிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி கும்பாபிஷேக வழிபாடுகள் கடந்த 30ம் தேதி யாகசாலை வளர்க்கப்பட்டு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னர் அடுத்தடுத்த நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு சிலைகள் பிரதிஷ்டை, அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நான்காம் நாளான நேற்று யாகசாலை மற்றும் கோ பூஜையுடன் சிவாச்சாரியார்கள் மற்றும் கிராம மக்கள் புனித நீர் கும்பத்துடன்ஆலயத்தை வலம் வந்தனர். இதையடுத்து கொடுமலூர் கோயில் சிவாச்சாரியார் நவநீதன் தலைமையில் முத்தையா சுவாமி கோயில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து பரிவார தெய்வங்களான கணபதி, முருகன், மதலை கருப்பணசாமி, இருளாகி மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவகிரக ஆலயத்திற்கும் புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் பரமக்குடி மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை காட்டுப்பரமக்குடி கிராம பொதுமக்கள், விழா கமிட்டியினர், மகளிர் மன்றத்தினர் மற்றும் முத்தையா கபாடி குழுவினர் செய்திருந்தனர்.

The post 300 ஆண்டு பழமையான முத்தையா கோயில் கும்பாபிஷேகம்: பரமக்குடியில் நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: