புதுச்சேரி, பிப். 17: அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவித்த வேலை நிறுத்தம் காரணமாக புதுவையின் நகர பகுதியில் 3 மணி நேரம் பஸ், ஆட்டோ ஓடவில்லை. கிராமப்புறங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள், சம்மேளனங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி உள்ளிட்டவை இணைந்து பிப். 16 அன்று ஒருநாள் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
அதன்படி புதுச்சேரியிலும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று கிராமப்புறங்களில் முழு அடைப்பு நடைபெற்றது. இதன் காரணமாக பாகூர், மதகடிப்பட்டு, திருக்கனூர், கிருமாம்பாக்கம், வில்லியனூர், திருபுவனை உள்ளிட்ட கிராமப்புறங்களில் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. பாகூர், மதகடிப்பட்டில் அனைத்து தொழிற்சங்கத்தினர், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இதேபோல் நகர பகுதிகளில் 3 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நகரின் பெரும்பாலான இடங்களில் தனியார் பஸ்கள், ஆட்டோ, டெம்போக்கள் ஓடவில்லை. லோடுகேரியர், வேன் உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படவில்லை. அதேவேளையில் கடைகள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் பாதிப்பின்றி வழக்கம்போல் செயல்பட்டன. ஏஐடியுசி, சிஐடியுசி, ஐஎன்டியுசி, ஏஐசிசிடியு, தொமுச, விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் பேரணியாக சென்று மறியலில் ஈடுபட்டனர். அவர்களை வழியிலேயே உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கில்டா சத்யநாராயணா தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மறியல் போராட்டத்தில் 500 பேர் வரை கைதாகினர். அதேவேளையில் நகர பகுதியில் சிறிதளவே பாதிப்பு இருந்தன.
The post 3 மணிநேரம் ஆட்டோ ஓடவில்லை அனைத்து தொழிற்சங்கங்கள் பந்த் புதுவையில் கடைகள் அடைப்பு மறியலில் ஈடுபட்ட 500 பேர் கைது appeared first on Dinakaran.