சிங்கம்புணரி : சிங்கம்புணரி மற்றும் சுற்றுக் கிராமங்களில் தென்னை நார் கயிறு தயாரிக்கும் பணி புகழ் பெற்றதாகும். மாவட்டத்திலேயே இங்குதான் 5,000க்கும் மேற்பட்ட கயிறு தொழிலாளர்கள் தென்னை நார் கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் 90 சதவீதம் பெண்கள் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர். சீசன் அடிப்படையில் 6 அடி முதல் 300 அடி நீளம் வரையிலான பல்வேறு வகையான கயிறுகள் தயாரிக்கப்படுகிறது. தற்போது அறுவடை காலம் என்பதால் நெற்கதிர் கட்டும் கயிறு, கொச்சை கயிறு, வடக்கயிறு, சார கயிறு என தேவைகளுக்கு ஏற்றால் போல் தடிமன் நீளம் ஆகியவற்றில் பல்வேறு வகைகளில் கயிறுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது காரைக்குடி அருகே அரியக்குடி பெருமாள் கோயிலுக்கு ஆர்டரின் பெயரில் தலா ஒரு டன் எடையில் 300 அடி நீளம் உள்ள இரண்டு தேர் வடக்கயிறுகள் தயாரிக்கும் பணி கடந்த 20 நாட்களாக 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவும் பகலாக வேலை பார்த்து வருகின்றனர்.
இதில் தொழிலாளர்கள் தனித்தனியாக கயிறுகளை திரித்தும் அதன் பின் தேர்வட கயிறுகளாக மாற்றும் பணியில் நேற்று ஈடுபட்டு வந்தனர். தமிழகத்தின் பல்வேறு கோயில்களுக்கு சிங்கம்புணரியில் இருந்து தான் தேர்வடக்கயிறுகள் அதிகளவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
The post சிங்கம்புணரியில் கோயிலுக்கு தயாராகும் 2 டன் தேர் வடக்கயிறு appeared first on Dinakaran.