27 மின்னணு தராசுகள் பறிமுதல் வணிகர்கள் முத்திரையிடாத தராசுகளை பயன்படுத்தினால் ரூ.25000 அபராதம்: தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை

சென்னை: வணிகர்கள் முத்திரையிடாத தராசுகளை பயன்படுத்தினால் ரூ.25000 வரை அபராதம் என தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சென்னை 2ம் வட்ட அமலாக்க பிரிவு தொழிலாளர் உதவி ஆணையர் சுபாஷ்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மார்க்கெட்டுகள், முக்கிய சாலைகள் நடைபாதை கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள். பழங்கள் மற்றும் மீன்கள் எடை குறைவாக விற்பனை செய்யப்படுவதாக வெளியான செய்தி அடிப்படையில் நுகர்வோர் நலன் கருதி தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த். சென்னை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி லட்சுமிகாந்தன் மற்றும் தொழிலாளர் தனை ஆணையர்-1 விமலநாதன் ஆகியோரது உத்தரவுகளுக்கிணங்க சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகள் மற்றும் இதர இடங்களில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் விதிகளின் கீழ் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கடந்த ஆக.30ம் தேதி சென்னை திருவான்மியூர் மருந்திஸ்வரர் காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009-ன் கீழ் சென்னை 2ம் வட்ட அமலாக்க பிரிவு தொழிலாளர் உதவி ஆணையர் சுபாஷ்சந்திரன் தலைமையில் சார்நிலை அலுவலர்கள் மற்றும் திருவான்மியூர் காவல் உதவி ஆய்வாளர் வேலாயுதம் மற்றும் குழுவினருடன் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் போது 65க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், முத்திரையிடப்படாமல் பயன்பாட்டில் இருந்த 27 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வியாபாரிகள் வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் எடையளவுகளை உரிய காலத்திற்குள் மறுமுத்திரையிட்டு மறுமுத்திரை சான்றினை நுகர்வோருக்கு நன்கு தெரியும் படியும் காட்டி வைக்க வேண்டும் அவ்வாறு வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் எடையளவுகளை உரிய காலத்தில் மறுமுத்திரையிடாமல் இருந்தால் ரூ.5000 முதல் ரூ.25000 வரையில் அபராதம் விதிக்கப்படும். மேலும் சட்டமுறை எடையளவு சட்டம் விதிகள் 2011-ன் கீழ் வியாபாரத்திற்கு தயாராக வைக்கப்பட்டுள்ள பொட்டலப் பொருட்களில் உரிய அறிவிப்புகளான தயாரிப்பாளர் பொட்டலமிடுபவர் பெயர் மற்றும் முகவரி பொருளின் பெயர். பொருளின் நிகர எடை,எண்ணிக்கை, பொட்டலமிடப்பட்ட மாதம், வருடம், அதிகபட்ச சில்லறை விற்பனை விலை, நுகர்வோர் புகார் தெரிவிப்பதற்கான பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற அறிவிப்புகள் இடம்பெற வேண்டும். அவ்வாறாக மேற்படி அறிவிப்புகள் இல்லாமல் பொட்டலப்பொருட்கள் விற்பனைக்கு இருக்கும் நேர்வில் சம்பந்தப்பட்ட விற்பனையாளர் மீது வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ரூ.5000 முதல் ரூ.25000 வரையில் அபராதம் விதிக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

 

The post 27 மின்னணு தராசுகள் பறிமுதல் வணிகர்கள் முத்திரையிடாத தராசுகளை பயன்படுத்தினால் ரூ.25000 அபராதம்: தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: