×
Saravana Stores

கனமழையில் காணாமல் போன 200 மாடுகள்: 2 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு


மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கனமழையின்போது, மேய்ச்சலுக்கு சென்று வழி தெரியாமல் சுற்றித் திரிந்த 200 மாடுகள் 2 நாட்களுக்கு பிறகு கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்ததால் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஊராட்சிக்குட்பட்ட பண்டிதமேடு பகுதியில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ளவர்கள், வீட்டிற்கு சராசரியாக 2 முதல் 4 மாடுகள் வைத்துள்ளனர். இந்நிலையில், வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது.

அப்போது, பண்டிதமேடு பகுதியில் இருந்து மேய்ச்சலுக்கு சென்ற 250க்கும் மேற்பட்ட மாடுகள் கடந்த 2 நாட்களாக வழி தெரியாமல் ஆங்காங்கே சுற்றித் திரிந்தது. இதனால், தங்களது மாடுகளை கண்டுபிடித்து மீட்டு வர முடியாமல் மாட்டின் உரிமையாளர்கள் சிரமமடைந்தனர். இந்நிலையில், அருகில் உள்ள பையனூர், ஆலத்தூர், சிறுதாவூர், காரனை, குண்ணப்பட்டு மற்றும் பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலின் பேரில், விரைந்து சென்ற மாட்டின் உரிமையாளர்கள் 150க்கும் மேற்பட்ட மாடுகளை பத்திரமாக அழைந்து வந்தனர்.

பின்னர், மற்ற இடங்களில் சுற்றித் திரிந்த 50 மாடுகள் தானாகவே வீட்டிற்கு வந்ததால் மற்ற உரிமையாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இன்னும், 50 மாடுகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதா என தேடும் பணியில் உரிமையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாமல்லபுரம் அருகே மேய்சலுக்கு சென்று 2 நாட்களுக்கு பிறகு 200க்கு மேற்பட்ட மாடுகள் கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்த நிகழ்வு உரிமையாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post கனமழையில் காணாமல் போன 200 மாடுகள்: 2 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,
× RELATED மாமல்லபுரம் பஞ்ச பாண்டவர்...