2ம் சீசன் நிறைவடைந்தும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

 

ஊட்டி, நவ. 5: 2ம் சீசன் முடிந்து ஒரு வார காலம் ஆன நிலையில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறையாமல் உள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு கோடை சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். 2ம் சீசனான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கையாக உள்ளது. இவ்விரு மாதங்கள் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளை காட்டிலும், வடமாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று அதிகமாக காணப்படும்.

அப்போது ஓட்டல் உணவு மற்றும் லாட்ஜ் அறை கட்டணங்கள் உயர்த்தப்படும். இருந்த போதிலும், வெளி நாடுகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிள் வருகின்றனர். 2ம் சீசன் முடிந்து ஒரு வாரமாகியும், ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையவில்லை. நேற்றும் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பொதுவாக நவம்பர் மாதத்தில் ஊட்டியில் மழை பெய்யும். அதேபோல், அங்காங்கே மழை சேதம் இருக்கும். நவம்பர் மாதம் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தே காணப்படும். ஆனால், இம்முறை இதுவரை மழை தீவிரமடையாமல் உள்ளது. இதனால், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையாமல் உள்ளது. நேற்றும் இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post 2ம் சீசன் நிறைவடைந்தும் சுற்றுலா பயணிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: