காங்கிரஸ் வேட்பாளரின் அண்ணன் வீட்டில் மாமரத்தில் பதுக்கிய ரூ.1 கோடி சிக்கியது; ஐடி அதிகாரிகள் அதிரடி: வைரலாகும் வீடியோ

மைசூரு: காங்கிரஸ் வேட்பாளரின் அண்ணன் வீட்டின், மாமரத்தில் பதுக்கிய ரூ.1 கோடியை, வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் புத்தூர் சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசோக்குமார் ராய். இவரது சகோதரர், மைசூரை சேர்ந்த கே.சுப்பிரமணிய ராய். இவரது வீட்டில், வருமானத்துக்கு அதிகமாக பணம் சேர்த்து வைத்து, அதை பதுக்கி வைத்துள்ளதாக, வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள், நேற்று முன்தினம் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, அவரது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தின் உச்சியில் உள்ள ஒரு கிளையில், ஒரு பார்சல் இருப்பது தெரிந்தது. அதை பற்றி கேட்டபோது, யாரும் பதில் சொல்லவில்லை. இதையடுத்து அதிகாரிகள், அந்த பார்சலை கைப்பற்றி பிரித்து பார்த்தபோது, கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. அதில் இருந்த மொத்தம் ரூ.1 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் இருந்த பார்சலை பிரித்த அதிகாரிகள், ‘என்ன இது? காசு இல்லையா? யார் வைத்தது? முதலில் சொல்லுங்கள் என அங்கிருந்த குடும்பப் பெண்ணிடம் கேட்கும் வீடியோ, பார்சலை பிரித்த அதிகாரிகள் பணத்தை எண்ணும் மற்றொரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மைசூரு மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் இவ்வளவு பெரிய அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post காங்கிரஸ் வேட்பாளரின் அண்ணன் வீட்டில் மாமரத்தில் பதுக்கிய ரூ.1 கோடி சிக்கியது; ஐடி அதிகாரிகள் அதிரடி: வைரலாகும் வீடியோ appeared first on Dinakaran.

Related Stories: