15 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த போலி பாஸ்போர்ட் வழக்கு 175 பேரின் விவரங்களை சரிபார்க்காத போலீசார் மீது நடவடிக்கை: அதிகாரிகளுக்கு உத்தரவு

* ஒரே மாதத்தில் விசாரணை முடித்த போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு

சென்னை: 15 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த 175 போலி பாஸ்போர்ட் வழக்குகளில் ஒரே மாதத்தில் விசாரணை நடத்தி முடித்த மத்திய குற்றப்பிரிவு போலீசாரை நேரில் அழைத்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டினார். மேலும், குற்றவாளிகளின் போலி பாஸ்போர்ட்டை சரியாக ஆய்வு செய்யாத காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் மூலம் வெளிநாட்டினர் பலர் இந்திய குடியுரிமை பெற்றதுபோல போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அவர்களை விமான நிலையத்தில் உள்ள குடியுரிமைத்துறை அதிகாரிகள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கின்றனர்.

அதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவின் கீழ் இயங்கும் போலி பாஸ்போர்ட் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் நாடு முழுவதிலும் இருந்து போலியான பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்றதாக கடந்த 2008 ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு காலத்தில் மட்டும் மத்திய குற்றப்பிரிவில் 236 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.இந்த போலி பாஸ்போர்ட் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள வெளிநாடு மற்றும் உள்நாட்டை சேர்ந்த 227 பேர். பல்வேறு காரணங்களால் கடந்த 15 ஆண்டுகளாக வழக்கு முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள போலி பாஸ்போர்ட் வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள், வெளிநாட்டவர்கள் மீதான விசாரணையை விரைவாக முடித்து நீதிமன்ற விசாரணைக்கு பிறகு அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பும் வகையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஒரு சிறப்பு செயலாக்க திட்டம் வகுத்தார்.

அதன்படி நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரிக்கு உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் 15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 236 வழக்குகளில் 175 வழக்குகளில் குற்றவாளிகள் மற்றும் வெளிநாட்டினரிடம் விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. அதில் 22 வழக்குகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் பணி நடந்து வருகிறது. 13 வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளன.

அந்த சிறப்பு செயலாக்க திட்டத்தின் போது, குற்றவாளிகள் தங்களது நாட்டினை மறைத்து போலி பான் கார்டு, ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையான அட்டை போன்றவற்றை சமர்ப்பித்து அதன் மூலம் பாஸ்போர்ட் வாங்கியவர்கள் குறித்த தகவல் தொடர்புடைய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு அந்த ஆவணங்களை ரத்து செய்ய பரிந்துரைப்பட்டது. மேலும், இந்த போலி பாஸ்போர்ட் குற்றத்தோடு தொடர்புடைய குற்றவாளிகளின் பாஸ்போர்ட்களை சரி பார்த்த ‘காவலர்கள்’ மீது நடவடிக்கை எடுக்கும்படி, சம்பந்தபட்ட மாவட்ட எஸ்பிக்களுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் அறிக்கை அனுப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் போலி பாஸ்போர்ட் குற்றங்களில் ஈடுபட்ட 3 வெளிநாட்டவர், நீதிமன்ற நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதோடு இல்லாமல் போலி பாஸ்போர்ட் பெற உதவிய ஏஜென்ட்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் நிலுவையில் இருந்து 175 போலி பாஸ்போர்ட் வழக்குகளில் விரைந்து விசாரணை முடித்த மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, கூடுதல் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன், உதவி கமிஷனர் சரஸ்வதி, இன்ஸ்பெக்டர்கள் தனலட்சுமி, ராஜேஷ்கண்ணா உள்ளிட்டவர்களை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

* மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டினரின் விபரம்
போலி பாஸ்போர்ட் வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களில் 95 பேர் உள்நாட்டை சேர்ந்தவர்கள், 65 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள், 59 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் மற்றும் 8 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post 15 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த போலி பாஸ்போர்ட் வழக்கு 175 பேரின் விவரங்களை சரிபார்க்காத போலீசார் மீது நடவடிக்கை: அதிகாரிகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: