அடியாட்களுடன் மிரட்டல் விடுப்பவர் மீது நடவடிக்கை கோரி 3 குடும்பத்தை சேர்ந்த 15 பேர் தீக்குளிக்க முயற்சி

*வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

வேலூர் : விவசாய நிலத்திற்கு செல்லும் பொதுவழியை ஆக்கிரமித்ததை தட்டி கேட்டதால் அடியாட்களுடன் வந்து மிரட்டும் முன்னாள் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி 3 குடும்பத்தை சேர்ந்த 15 பேர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர்.வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, குறைதீர்வு கூட்டம் நடக்கும் நுழைவு வாயில் அருகே குழந்தைகளுடன் 15க்கும் மேற்பட்டோர் வந்தனர். அதில் ஒருவர் திடீரென கேனை எடுத்து தன் மீதும், குழந்தைகள், பெண்கள் என 15 பேர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உடனடியாக அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிப்பு முயற்சியை தடுத்தனர்.

இதற்கிடையில் மண்ணெண்ணெய் ஊற்றியதால் குழந்தைகள் கதறி அழுதனர். உடனே அவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.விசாரணையில், கே.வி.குப்பம் அருகே உள்ள மகமதுபுரத்தை சேர்ந்த தர், முரளி, உத்திரகுமார் மற்றும் இவர்கள் குடும்பத்தை சேர்ந்த 15 பேர் என தெரியவந்தது. இவர்களுக்கு அதே பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் இருப்பதும், நிலத்திற்கு செல்லும் பொதுவழியை முருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர், ஆக்கிரமிப்பு செய்து மண்ணை கொட்டியுள்ளார்.

இதனால் நிலத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வந்த அவர், இதுதொடர்பாக ஓராண்டாக அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லையாம். இதையறிந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், வெளியூரில் உள்ள 15க்கும் மேற்பட்ட அடியாட்களை வரவழைத்து இவர்களின் குடும்பத்தை மிரட்டினாராம்.

அங்கு வாழ முடியாத நிலை உள்ளதாகவும், தங்களின் வாழ்வாதாரமே விவசாயம் என்று இருக்கும் நிலையில் நிலத்திற்கு செல்ல முடியாமல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அடாவடியில் ஈடுபட்டு வருவதாகவும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தற்கொலை செய்து ெகாள்ள முடிவு செய்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை கலெக்டரிடம் போலீசார் அழைத்து சென்று மனு அளிக்க வைத்தனர்.

மனுவை பெற்ற கலெக்டர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் இதுபோன்று தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post அடியாட்களுடன் மிரட்டல் விடுப்பவர் மீது நடவடிக்கை கோரி 3 குடும்பத்தை சேர்ந்த 15 பேர் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: