142.86 கோடியுடன் சீனாவை முந்தியது மக்கள்தொகையில் இந்தியா முதலிடம்: ஐநா அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: உலக மக்கள்தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி 142.86 கோடி மக்கள்தொகையுடன் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளதாக ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக மக்கள்தொகை நிதியத்தின் உலக மக்கள் தொகை குறித்த 2023ம் ஆண்டு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், சீனாவை பின்னுக்கு தள்ளி, உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வந்த சீன மக்கள்தொகை கடந்தாண்டு முதல் முறையாக குறைந்தது. சீன மக்கள் தொகையின் சரிவு அதன் பொருளாதாரத்திலும், உலகளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஐநா தெரிவித்துள்ளது.

இந்தாண்டின் மத்தியில் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை விட 29 லட்சம் கூடுதலாக இருக்கும் என்று ஐநா முன்னதாகவே கணித்திருந்தது. அதன்படி, இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 142.86 கோடியாகவும், சீனாவின் மக்கள்தொகை 142.57 கோடியாகவும் இருப்பதாக நேற்று ஐநா கூறியுள்ளது. சீனாவில் பெண்கள் 82 வயது, ஆண்கள் 76 வயது வரையிலும் வாழ்ந்து வருகின்றனர். அதே நேரம், இந்தியாவில் ஆண் சராசரியாக 71 வயது வரையிலும், பெண் 74 வயது வரை வாழ்வதாக ஐநா ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஐநா உலக மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பின் இந்திய பிரதிநிதி ஆன்ட்ரியா வோஜன் கூறுகையில், “இந்திய மக்கள்தொகை வரைபடம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. கேரளா, பஞ்சாபில் அதிக வயதானவர்களும், பீகார், உ.பி.யில் இளைஞர்களும் அதிகளவில் உள்ளனர். ஆனால் நாடு முழுவதும் 25.40 கோடி இளைஞர்கள் (15-24 வயது) இருப்பதால், புதுமையான, புதிய சிந்தனை மற்றும் நிரந்தர தீர்வுகளின் ஆதாரமாக இந்தியா விளங்கும்,’’ என்று தெரிவித்தார்.

அதே நேரம், மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்தியா கடந்த 2011ம் ஆண்டுக்கு பிறகு 2021ம் ஆண்டில் கொரோனா தொற்று காரணமாக நடத்தவில்லை. எனவே, இந்திய மக்கள் தொகையின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இதுவரை வெளியாகவில்லை.

இதனால் பல்வேறு தரவுகளை கணக்கில் கொண்டு அதன் அடிப்படையில் ஐநா இந்த முடிவை வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 804.50 கோடியாக இருக்கும். இதில், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகை இந்தியா, சீனாவில் இருக்கும். இருப்பினும், இவ்விரு நாடுகளிலும் மக்கள் தொகை அதிகரிக்கும் வேகம் தற்போது குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 2011 முதல் அதன் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 1.2 சதவீதமாக உள்ளது. அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் இந்த வளர்ச்சி 1.7 சதவீதமாக இருந்தது. இந்தியாவின் மக்கள்தொகை குறித்து பல்வேறு அமைப்புகள் மதிப்பிடுகையில், இந்தியாவின் மக்கள்தொகை அடுத்த 2050ம் ஆண்டு 166.8 கோடியை எட்டும். பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வயது வாரியாக

ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ள வயது அடிப்படையிலான இந்திய மக்கள்தொகை சதவீதத்தின் விவரம் வருமாறு:

வயது சதவீதம்

0-14 25%

10-19 18%

10-24 26%

15-64 68%

65க்கு மேல் 7%

இந்தியா 142.86 கோடி

சீனா 142.57 கோடி

வித்தியாசம் 29 லட்சம்

  • 2023 இறுதியில் உலக மக்கள் தொகை 804.50 கோடியாக இருக்கும்.
  • இதில், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகை இந்தியா, சீனாவில் இருக்கும்.
  • 2011க்கு பிறகு இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவில்லை.
  • பல்வேறு தரவுகளை கணக்கில் கொண்டு ஐ.நா மக்கள்தொகை குறித்த கணக்கை தயாரித்துள்ளது.
  • இந்திய மக்கள் தொகையில் 25.40 கோடி பேர் 15 முதல் 24 வயதுடைய இளைஞர்கள்.

2050ல்…

  • இந்தியாவின் மக்கள் தொகை 166.8 கோடியாக உயரும். அதன் பிறகு அது படிப்படியாக குறையத் துவங்கும்.
  • இந்தியர்களில் ஐந்தில் ஒருவர் மூத்த குடிமக்களாக இருப்பார்கள்.
  • சீனாவின் மக்கள் தொகை 131.7 கோடியாக குறைந்துவிடும்.

The post 142.86 கோடியுடன் சீனாவை முந்தியது மக்கள்தொகையில் இந்தியா முதலிடம்: ஐநா அறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: