×

12 மணிநேர வேலை சட்ட மசோதாவை திரும்பப் பெறக்கோரி மே 12ம் தேதி வேலைநிறுத்த போராட்டம் : தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

சென்னை: 12 மணிநேர வேலை என்கிற சட்ட மசோதாவை திரும்பப் பெறக்கோரி, மே 12ம் தேதி வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரித்து, தொழிற்சாலை சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஏஐடியுசி, சிஐடியு, எச்எம்எஸ், ஐஎன்டியுசி, ஏஐயூடியூசி, ஏஐசிசிடியு, உழைக்கும் மக்கள் மாமன்றம், எம்எல்எப், எல்எல்எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலசோனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஏப்.21ம் தேதி தொழிற்சாலை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவில், 2020ம் ஆண்டு தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் தொகுப்புச் (மையச் சட்டம் 37:2020) சட்டமானது 2020ம் ஆண்டு செப்டம்பரில் இந்திய அரசால் இயற்றப்பட்டது என்றும், அதை செயல்படுத்த தாமதமாவதால் இந்தச் சட்ட திருத்தத்தை கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் வேலை நேரத்தை நீட்டிப்பதன் காரணமாக தொழிலாளர்களுக்கு குறிப்பாக பெண் தொழிலாளர்களுக்கு நன்மை ஏற்படும் என்று முதலாளிகளும் முதலாளிகளின் சங்கங்களும் விண்ணப்பங்கள் தந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இது பற்றி தொழிற்சங்கங்களிடம் தமிழ்நாடு அரசு கலந்தாலோசிக்கவில்லை, மேலும் இதே போன்ற கோரிக்கை உயர்மட்ட முத்தரப்பு குழுவான தமிழ்நாடு மாநில தொழிலாளர் ஆலோசனை வாரிய கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு தொழிலாளர் அமைச்சர் முன்னிலையில் அதை பரிசீலிக்க இயலாது என நிராகரிக்கப்பட்டதையும் கவனத்தில் கொள்ளவில்லை. வேலை நேரக் குறைப்பிற்காக தொழிலாளர்கள் தொடர்ந்து 150 ஆண்டுகளாக போராடி வந்திருக்கிறார்கள்.

1880க்கு முன்பு 18 மணி நேரம் என்று இருந்த வேலை நேரம், படிப்படியாக 16, 14, 12, 10 எனக் குறைக்கப்பட்டு, 1936ல் புதுச்சேரியிலும் 1947ல் இருந்து இந்தியா முழுமையும் 8மணி வேலை நேரம் அமலுக்கு வந்தது. உலகின் பல நாடுகளில் ஐந்து நாள் வேலை, ஒரு நாளைக்கு 7 மணி நேரம் என 7 வாரத்துக்கு 35 மணி வேலை நேரம் என மேலும் குறைக்கப்பட்டுள்ளது. மீண்டும் வேலை நேரத்தை உயர்த்துவது சரியல்ல. 8 மணி வேலை நேரத்தை உயர்த்துவது குறித்த ஒன்றிய அரசு கொண்டுள்ள சட்டத் தொகுப்பை பிஎம்எஸ் உள்ளிட்ட எல்லா தொழிற்சங்கங்களும் எதிர்கின்றன.

இந்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில், தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையும் முன்னணியில் நின்று பங்கேற்று வருகிறது. ஒன்றிய அரசால் இதுவரை செயல்படுத்த முடியாத சட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னதாகவே செயல்படுத்துவதற்கு சட்ட திருத்தம் செய்வது கண்டனத்திற்குரியதாகும். இந்த சட்ட திருத்தத்தின் மீது விளக்கங்கள் பெறுவதோ அல்லது பேரம் பேசி உடன்பாட்டுக்கு வருவதோ எந்த வகையிலும் சாத்தியமானதல்ல. எனவே இந்த சட்டத் திருத்தத்தை கைவிட்டு, உடனடியாக திரும்பப் பெறுமாறு தமிழ்நாடு அரசை அனைத்து தொழிற்சங்க கூட்டம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இதற்காக பின்வரும் போராட்டங்களை நடத்த அனைத்து தொழிற்சங்க கூட்டம் முடிவு செய்கிறது. வரும் 26ம் தேதி ஆலை வாயில் கூட்டமும் ஆர்ப்பாட்டமும், 27ம் தேதி வேலை நிறுத்த முன்னறிவிப்பு வழங்குதல், 28ம் தேதி கருப்பு பட்டை அணிதல் மற்றும் ஆலைகளில் மதிய உணவு புறக்கணிப்பு, மே 4 மற்றும் 5ம் தேதிகளில் இருசக்கர வாகனப் பிரசாரம், மே.9ம் தேதி மாவட்ட தலைநகரங்கள் தொழில் மையங்களில் ஆர்ப்பாட்டம், மே.12ம் தேதி வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 12 மணிநேர வேலை சட்ட மசோதாவை திரும்பப் பெறக்கோரி மே 12ம் தேதி வேலைநிறுத்த போராட்டம் : தொழிற்சங்கங்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,unions ,Dinakaran ,
× RELATED குடோனில் இருந்து ரேஷன் கடைகளுக்கு...