×

நாகையில் இருந்து 13ம் தேதி போக்குவரத்து தொடக்கம் இலங்கைக்கு கப்பலில் பயணிக்க ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு: நிர்வாக இயக்குனர் அறிவிப்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு காரணங்களால் தொடங்கி குறுகிய காலத்திலேயே கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க ஒன்றிய அரசு தமிழக அரசுடன் இணைந்து டெண்டர் விடப்பட்டது.

இதனால் கப்பல் போக்குவரத்து வரும் 13ம் தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து நாகையில், நிர்வாக இயக்குநர் நிரஞ்சன் நத்த கோபாலன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் போக்குவரத்து சிவகங்கை என்ற பெயருடன் வரும் கப்பல் 13ம் தேதி காலை 8 மணிக்கு புறப்படுகிறது. இந்த கப்பல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன் துறை சென்றடையும்.

அதே போல் அங்கிருந்து 2 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு மாலை 6 மணிக்கு வந்தடையும். கப்பலில் பயணம் செய்ய விரும்புவோர் www.sailindsri.com என்ற இணைய தளம் முகவரி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அல்லது md@indsri.ferry.co.in முன்பதிவு செய்யலாம். கப்பலில் பயணம் செய்ய கட்டணம் ரூ.4 ஆயிரத்து 800 ஆகும். பயணிகள் 60 கிலோ எடை கொண்ட பொருட்களை எடுத்து செல்ல முடியும்.

அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பாஸ்போர்ட் அவசியம் வேண்டும். இந்திய நாட்டை சேர்ந்த பயணிகளுக்கு விசா தேவையில்லை. ஆனால் இடிஏ என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டியது இல்லை. கப்பலில் பயணம் செய்வோர் மது அருந்தவும், புகைபிடிக்கவும் அனுமதி இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post நாகையில் இருந்து 13ம் தேதி போக்குவரத்து தொடக்கம் இலங்கைக்கு கப்பலில் பயணிக்க ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு: நிர்வாக இயக்குனர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Nagai ,Nagapattinam ,Nagapattinam Port ,Sri ,Lanka Congestion Department ,Dinakaran ,
× RELATED நாகை- இலங்கை கப்பல் சேவை...