×

குடோனில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை எடை குறையாமல் அனுப்ப நடவடிக்கை

* உணவுத்துறை அமைச்சருக்கு தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கை

சென்னை: தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறையின் மூலம் சுமார் 33 ஆயிரம் நியாய விலை கடைகளுக்கு அந்தந்த மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து அரிசி உள்ளிட்ட பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு அனுப்பப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்களின் எடை ஒரு மூட்டைக்கு 2 கிலோ முதல் 5 கிலோ வரை குறைவாக வருகிறது.

இதனை அனைத்து தொழிற்சங்கத்தினரும் உணவு துறையின் கீழ் இயங்கும் நுகர்பொருள் வாணிப கழக உயர் அதிகாரிகளிடத்தில் பலமுறை முறையிட்டுள்ளோம். இந்நிலையில், கிடங்கில் இருந்து குறைவாக வரும் பொருட்களுக்கு ரேஷன் கடை ஊழியர்களிடம் கூடுதல் அபராதம் வசூலிக்கும் நடைமுறை மே 1ம் தேதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அரிசி கிலோ ரூ.25 என்ற அபராதம் ரூ.45ஆகவும், கோதுமை ரூ.25ல் இருந்து ரூ.45, சர்க்கரைக்கு ரூ.50, துவரம் பருப்புக்கு ரூ.75ல் இருந்து ரூ.110, பாமாயில் ரூ.75ல் இருந்து ரூ.130 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வாணிப கழக நிறுவன கிடங்குகளில் இருந்து அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் சரியான அளவில் எடை செய்து, கிழியாத கோணிப்பையில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைத்தால் இதுபோன்ற நிலை ஏற்படாது. பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் மிகவும் குறைந்த ஊதியத்தில் வேலை பார்க்கும் ரேஷன் கடை பணியாளர்களை பழிவாங்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

கிடங்கில் இருந்து உணவு பொருட்கள் லாரிகளில் அனுப்பி வைக்கும்போதே உணவுத்துறை மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் இதை கண்காணித்தால் முறைகேடுகளை தடுக்க முடியும். இதுபோன்ற அடிப்படையிலான எடை குறைவு பிரச்னைகளை உணவுத்துறை அதிகாரிகள், கூட்டுறவு துறை அதிகாரிகள் இணைந்து, எடை குறைவின்றி ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அனுப்பிய பின், அபராத தொகை உயர்வு பற்றி முடிவு செய்ய வேண்டும். அதுவரை அபராத தொகை உயர்வை நிறுத்திவைக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

The post குடோனில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை எடை குறையாமல் அனுப்ப நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : food minister ,Chennai ,Thomusa ,Tamil ,Nadu ,Chakrapani ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...