10 ஆண்டுக்கும் மேல் நிலுவை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகளை கைது செய்ய ‘புலன் விசாரணை பிரிவு’க்கு சிறப்பு பயிற்சி: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை மாநகர காவல் எல்லையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள கொலை, ஆதாய கொலை, வழிப்பறி, சந்தேகம் மரணம், ஆள்கடத்தல், வெடிபொருள் வழக்குகள், மத,சாதி ரீதியான மோதல் வழக்குகளில் தொடர்புள்ள குற்றவாளிகளை கைது செய்யும் வகையில், புதிதாக மாநகர காவல்துறையில் 1 காவல் மாவட்டத்துக்கு ஒரு குழு என 12 காவல் மாவட்டத்துக்கு புதிதாக ‘புலன் விசாரணை பிரிவு’ தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு என 12 புலன் விசாரணை பிரிவு காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவில் உள்ள காவலர்கள், அந்தந்த காவல் மாவட்ட துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் புலன் விசாரணையில் திறமையாக செயல்பட்ட ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் எஸ்ஐக்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு புலன் விசாரணை பிரிவானது. இதுவரை அவரவர் காவல் மாவட்டத்தில் கண்டு பிடிக்க முடியாத வழக்குகளை தூசி தட்டி மீண்டும் முதலில் இருந்து விசாரணை தொடங்கி உள்ளனர்.

மேலும், இந்த சிறப்பு புலன் விசாரணை பிரிவில் பணியாற்றும் காவல் குழுவிற்கு 3 நாள் பயிற்சி முகாம் நேற்று சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தொடங்கியது. இந்த பயிற்சி முகாமை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார். இந்த முகாமில், சட்ட வல்லுநர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அரசு வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற மூத்த அரசு வழக்கறிஞர்கள், தடய அறிவியல் துறை நிபுணர்கள், காவல் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், கண்டுபிடிக்க முடியாத கொலை உள்ளிட்ட வழக்குகளை எப்படி கையாள்வது, அதனை எப்படி எதிர்கொள்வது, அதன் மீதான சவால்களை முடியடிப்பது குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன், சீனிவாசவன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post 10 ஆண்டுக்கும் மேல் நிலுவை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகளை கைது செய்ய ‘புலன் விசாரணை பிரிவு’க்கு சிறப்பு பயிற்சி: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: