10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை: ராமநாதபுரம் கலெக்டர் எச்சரிக்கை

ராமநாதபுரம்: பொதுமக்கள் தரும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என, ராமநாதபுரம் கலெக்டர் எச்சரித்துள்ளார். ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணுசந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி முதன் முதலில் 2005ல் வெளியிட்டது. இதுவரை 14 வகையான 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டுள்ளது. ஒவ்வொன்றும் மற்றொன்றிலிருந்து டிசைன் வாரியாக மாறுபட்டு உள்ளது. அதிலும் முக்கியமாக ஒரு வகை 10 ரூபாய் நாணயத்தில் ரூபாய் சின்னம் (ரூ.) இருக்கும். மற்றொன்றில் அது (ரூ.) இருக்காது. இதுபோன்ற மாறுபாடு காரணமாக மக்களிடையே போலியான நாணயம், செல்லாது என வதந்தி பரவி வருகிறது.

10 ரூபாய் நாணயம் பற்றிய சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற 14440 என்ற கட்டணமில்லா சேவை இந்திய ரிசர்வ் வங்கி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 வகை 10 ரூபாய் நாணயங்களுமே செல்லும். அவற்றை செல்லாது என கூறுவதோ அதனை கொடுக்கவோ வாங்கவோ மறுப்பது சட்டப்படி குற்றம். மேலும் இந்திய தண்டனைச் சட்டம் 124யு-வின் படி ஒருவர் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க மறுக்கும் குற்றத்திற்கு மூன்று வருட சிறை தண்டனையும் அபராதமும் வழங்கப்படும். மேலும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயத்தை அவமதிக்கும் வகையில் நாணயத்தை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் மீது புகார் அளித்தால் அரசால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இயலும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை: ராமநாதபுரம் கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: