வேளச்சேரியில் கல்லூரி வளாக மோதல் விவகாரம்: இரவோடு இரவாக 10 மாணவர்கள் கைது

* 12 மாணவர்கள் மீது 5 சட்டப்பிரிவுகளில் வழக்கு
* இன்ஸ்பெக்டர் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு

சென்னை: வேளச்சேரி குருநானக் கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பட்டாசு வீசியது தொடர்பாக 12 மாணவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் முக்கிய குற்றவாளியான தனுஷ்குமார் உள்பட 10 மாணவர்களை கைது செய்தனர். மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க கல்லூரி முன்பு இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை வேளச்சேரி நெடுஞ்சாலையில் உள்ள குருநானக் கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை பொருளாதார பிரிவில் படித்து வரும் 3ம் ஆண்டு மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் நடன நிகழ்ச்சியில் நடந்த தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதை தொடர்ந்து 2 நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம், கல்லூரிக்கு வந்த மாணவர்களிடையே மீண்டும் குழு மோதல் ஏற்பட்டது. இதில் தனுஷ்குமார் தரப்பு மாணவர்கள், எதிர் தரப்பு மாணவர்கள் மீது மறைத்து வைத்திருந்த வெங்காய வெடிகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருந்தாலும், கல்லூரி நிர்வாகம் சார்பில் கல்லூரியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவர்கள் மீது கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கிண்டி போலீசார் விரைந்து வந்து வெடி வீசப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது வெடிக்காத வெடி ஒன்றை மீட்டு ஆய்வுக்காக அனுப்பினர்.

பின்னர், கிண்டி போலீசார், வெடிகளை வீசி மோதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி தனுஷ்குமார் உள்பட 12 பேர் மீது ஐபிசி 147 (சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), 148 (ஆயுதங்களுடன் கூடுதல்), 285 (தீ பற்றக்கூடிய பொருட்களை கவனக்குறைவாக கையாளுதல்), 294(பி) (ஆபாசமாக பேசுதல்), 506(2) (கொலை மிரட்டல் விடுதத்தல்) என 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், கல்லூரி வளாகத்தில் மோதலில் ஈடுபட்டு வெடி வீசி தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளி தனுஷ்குமார், அவரது நண்பர் விகாஷ் (19), மணிகண்டன் (19), வருண் (19), சுந்தர் (19), ஐயப்பன் (19), மதன் (19), மற்றொரு தனுஷ் (19), யுவராஜ் உள்ளிட்ட 10 மாணவர்களை இரவோடு இரவாக போலீசார் ேதடுதல் வேட்டை நடத்தி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி தனுஷ்குமார், தாக்குதலுக்கு பயன்படுத்திய வெடி யாரிடம் இருந்து வாங்கி வந்தார். இதன் பின்னணியில் உள்ள நபர்கள் பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், குருநானக் கல்லூரி நிர்வாகம், தனது கல்லூரியின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி, ஒழுங்கீனமாக செயல்பட்டதாக 18 மாணவர்களை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கும் முறையாக கல்லூரி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கல்லூரி வளாகத்தில் வெடி வீசிய விவகாரம் தொடர்பாக ேமலும் எந்த அசம்பாவிங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் குருநானக் கல்லூரி முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கு இடமான வகையில் உள்ள மாணவர்களை மட்டும் போலீசார் சோதனை செய்த பிறகே கல்லூரி வளாகத்திற்குள் அனுமதித்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 மாணவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

The post வேளச்சேரியில் கல்லூரி வளாக மோதல் விவகாரம்: இரவோடு இரவாக 10 மாணவர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: