மூன்றில் ஒரு பங்கு தேவையை பூர்த்தி செய்யும் காற்றாலை தமிழ்நாட்டில் 100 மில்லியன் யூனிட்டை தாண்டியது மின்உற்பத்தி: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

 

சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து 100 மில்லியன் யூனிட்டை கடந்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது, மூன்றில் ஒரு பங்கு மின் தேவையை காற்றாலை மின்சாரம் பூர்த்தி செய்வதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள், குறிப்பாக காற்று மற்றும் சூரிய சக்தி வளங்கள் அதிகளவில் உள்ளன. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் அதிக சூரிய கதிர்வீச்சும், தீவிர காற்று ஆற்றலும் அதிகமாக உள்ளது. தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தியில் முன்னிலை வகித்து வருகிறது. நாட்டின் காற்றாலை மின் நிறுவுதிறனில் 24 சதவீத பங்களிப்பை அளிக்கிறது.

தமிழகத்தில் குமரி, நெல்லை, தென்காசி, திருப்பூர் மாவட்டம் உடுமலை போன்ற பகுதிகளில் காற்றாலைகள் அதிகம் உள்ளன. ஜூன் மாதத்தில் காற்று சீசன் தொடங்கிய நிலையில், பின்னர் வரத்து குறைந்தது. கடந்த ஜூலை மாதம் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு கடந்த 17ம் தேதி ஆடி மாதம் தொடங்கியது முதலே தமிழகம் முழுவதும் காற்று வேகமாக வீசி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள காற்றாலைகளில் தற்போது மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆடி மாதம் தொடங்கிய முதல் நாளில் மட்டும் சுமார் 106 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மின் உற்பத்தியின் அளவு உயர்ந்துள்ளது. மேலும் தனியார் காற்றாலை மின் உற்பத்தியாளர்களிடம் இருந்தும் மின்வாரியம் மின்சாரம் கொள்முதல் செய்கிறது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: 2022, ஜூலை 12ம் தேதி காற்றாலை மின்சார கட்டமைப்புகள் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 25.9 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்தது. இது இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட காற்றாலை மின்சாரத்தில் அதிகபட்ச அளவாகும். காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டும் இதே அளவில் மின் உற்பத்தி செய்ய முடியும். அடுத்த வாரத்தில், காற்றாலை மின் உற்பத்தி குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஆகஸ்ட் முதல் வாரத்தில் அது மீண்டும் அதிகரிக்கும்.

இந்தியாவின் மொத்த காற்றாலை மின் உற்பத்தியில், தமிழ்நாடு 24 சதவீதம் அதாவது தமிழ்நாடு 107,20.24 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திறனை கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் காற்றாலை ஆற்றல் மின்உற்பத்தி வேகமெடுத்து, தொடர்ந்து 100 மில்லியன் யூனிட்டை தாண்டி, மொத்த மின்சாரத் தேவையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை காற்றாலை மின்சாரம் பூர்த்தி செய்கிறது. ஆரல்வாய்மொழி – பொள்ளாச்சியில் இருந்து செங்கோட்டை, ஆண்டிபட்டி செல்லும் பாதைகள் வழியாக காற்றாலைகள் முழுவீச்சில் மின் உற்பத்தி செய்து வருகின்றன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மின்சாரத்தை விநியோக்கும் முறை குறித்து காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் சிலர் மின் கட்டமைப்பை பராமரிக்க வேண்டும், உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஆற்றலையும் விநியோகிக்க முடியாவில்லை என்றும் ஆங்காங்கே காற்றாலை உற்பத்தியை குறைத்து வருவதாக காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் காற்றாலை மின் மின்சார கட்டமைப்புகளை தொடர்ந்து புதுப்பித்து விநியோகத்திற்கு தயாராக வைத்திருக்கிறோம். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பின்வாங்குவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. பல்வேறு தட்பவெட்ப நிலை காரணமாக கடந்த ஒரு வாரமாக காற்றாலையின் அமைப்பு சீராக செயல்படவில்லை, ஆனால் தொடர்ந்து காலநிலைகளை கண்காணித்து வருகிறோம். சூரிய ஒளி மின் உற்பத்தியும் கடந்த திங்கட்கிழமை குறைந்தது. மத்திய கட்டமைப்பிலிருந்து கூடுதலாகவோ, குறைவாகவோ மின்சாரம் எடுக்கப்படும் நிலை இருந்தாலும், உற்பத்தி செய்யப்படும் அனைத்து காற்றாலை மின்சாரத்தையும் தொடர்ந்து விநியோகித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post மூன்றில் ஒரு பங்கு தேவையை பூர்த்தி செய்யும் காற்றாலை தமிழ்நாட்டில் 100 மில்லியன் யூனிட்டை தாண்டியது மின்உற்பத்தி: மின்வாரிய அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: