அண்ணாநகரில் உணவு பாதுகாப்பு துறை சோதனை மளிகை, பெட்டி கடைகளில் 100 கிலோ குட்கா பறிமுதல்: ரூ80 ஆயிரம் அபராதம்

அண்ணாநகர்: அண்ணாநகர் சுற்று வட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, மளிகை மற்றும் பெட்டி கடைகளில் இருந்து, 100 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூ80 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
சென்னை அண்ணாநகர், அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு வில்லிவாக்கம் மற்றும் வடபழனி ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகளில் தடையை மீறி குட்கா விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுந்தரமூர்த்தி, சதாசிவம், ராமராஜ் உள்பட 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று காலை மேற்கண்ட பகுதிகளில் உள்ள பெட்டி கடை, மளிகை கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கடைகளில் இருந்து, 100 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ரூ80 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து, சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறும்போது, ‘‘அண்ணாநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிளில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, அந்த கடைகளை ஆய்வு செய்து குட்காவை பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து சோதனை செய்து வருகிறோம். கல்லூரி மற்றும் பள்ளி அருகே உள்ள பெட்டி கடை, மளிகை கடைகளில் குட்கா விற்பனை செய்வது தெரியவந்தால் உடனடியாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்,’’ என்றார்.

The post அண்ணாநகரில் உணவு பாதுகாப்பு துறை சோதனை மளிகை, பெட்டி கடைகளில் 100 கிலோ குட்கா பறிமுதல்: ரூ80 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: