‘‘ஏக்கர் கணக்கா சுருட்டி இருக்காங்களாமே..’’ என அதிர்ச்சியுடன் கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. ஹனிபீ மாவட்டத்தில் கிணறு தோண்ட பூதம் கிளம்பிய கதை நடந்து வருகிறது. மாவட்டத்தின் இலைக்கட்சியின் முக்கிய விவிஐபியான ‘மூன்றெழுத்துக்காரருக்கு’ மிக நெருக்கமான ஒன்றிய செயலாளர் 100 ஏக்கர் அரசு நிலத்தை தனது பெயரிலும், சொந்த, பந்தங்கள் பெயரிலும் பட்டா மாறுதல் செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கு… கடந்த இலைக்கட்சி ஆட்சியின்போது இம்மாவட்டத்தில் கொத்துக்கொத்தாக மேலும் பல இடங்களில் அரசு நிலங்களை அதிகாரிகள் லகரங்களை சுருட்டிக்கொண்டு பட்டா போட்டு விற்பனை செய்தது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. இலைக்கட்சியினரோடு, அதிகாரிகளும் போட்டி போட்டு புகுந்து விளையாடி உள்ளனர். மோசடி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும் மாவட்டத்தில் நில மோசடியால் பாதிக்கப்பட்ட பலர் கலெக்டரிடம் மனு கொடுக்க ஆரம்பிச்சுருக்காங்க… இதனால், தற்போதுள்ள வருவாய்த்துறை, நிலஅளவைத் துறை இணைந்து எங்கெல்லாம் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளது, தற்போதைய நிலை என்ன என்பது குறித்து கணக்கெடுக்கும் பணியை துவக்கி இருக்காங்களாம்… நில மோசடியில் அடுத்தடுத்து மேலும் பல இலைக்கட்சி பிரமுகர்கள் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், மாவட்டத்தில் உள்ள அக்கட்சியினரிடம் மயான அமைதி தொடர்கிறது…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இஎஸ்ஐ மருந்தகத்தில் என்ன பிரச்னை..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நாகர்கோவிலில் உள்ள இ.எஸ்.ஐ மருந்தகத்தில் பணியாற்றும் மருத்துவர்களிடையே மோதல் போக்கு தொடர்கிறது. மருந்தகத்தில் சீனியர் மருத்துவரான பெண் மருத்துவர் ஒரு வாரம் விடுப்பில் சென்று திரும்பியபோது அவரது பொறுப்பை பணியில் இளையவருக்கு மதுரையில் உள்ள மண்டல நிர்வாக அலுவலர் வழங்கியுள்ளார் என தெரிந்தது. விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்த பின்னரும் சீனியருக்கு மீண்டும் இன்சார்ஜ் என்ற பொறுப்பு வழங்கப்படவில்லை. இப்போது யார் மருந்தகத்தை நிர்வாகம் செய்வது, யார் இன்சார்ஜ் என்பதில் தொடங்கி மருந்தகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. ஜூனியர் டாக்டர் நான்தான் இன்சார்ஜ் என்று மருந்தக பணியாளர்களிடம் கூறி வருகிறாராம். இதன் உச்சகட்டமாக மொத்தம் உள்ள மூன்று மருத்துவர்களும் ஒரே அறையில் இருந்து வெளி நோயாளிகள் பிரிவை கவனித்து வர, ேபானில் பேசுவது போன்று தன்னை பார்த்து தகாத வார்த்தைகளால் அம்மருத்துவர் திட்டுவதாக பெண் மருத்துவர் சென்னையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்ற வேளையில் பெண் மருத்துவரை திட்டிய அம்மருத்துவர் மருந்தக கட்டிடத்தின் சமையல் அறையில் அமர்ந்துகொண்டு நோயாளிகளை கவனித்து வருகிறாராம். இந்த இன்சார்ஜ் குளறுபடிகள் நோயாளிகளை பாதிக்கும் முன்னரே தீர்வு காண வேண்டியது அவசியம் என்கின்றனர் நோயாளிகள்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாவட்ட நிர்வாகிகளுக்குள் இருக்கும் ஈகோ பிரச்னையால் தாமரை கட்சிக்குள் விரிசல் ஏற்பட்டிருக்காமே..’’ ‘‘நெற்களஞ்சிய மாவட்டத்தில் தாமரை கட்சியில் வடக்கு, தெற்கு மாவட்டம் மற்றும் மாநகர வடக்கு, தெற்கு என 4 ஆக சமீபத்தில் பிரிக்கப்பட்டதாம்… கட்சியின் கூட்டம், ஆர்ப்பாட்டம், தலைவர்கள் பிறந்தநாள், ஒன்றிய அமைச்சர் வருகை என எந்த நிகழ்வாக இருந்தாலும் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்களுக்கு தெரிவிப்பதில்லையாம்… மாவட்ட அளவில் உள்ள ஒரு சில நிர்வாகிகள் மட்டும் ஐடி விங் நிர்வாகிகளுடன் கைகோர்த்து கொண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றனர். நிகழ்ச்சிக்கான போட்டோ, வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொள்கின்றார்களாம்.. சமீபத்தில் மோடி பிறந்த நாளில் சில நிர்வாகிகள் பிளக்ஸ் போன்ற டிசைன் தயார் செய்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார்களாம்… ஆனால் தொண்டர்கள் தான் வட்டிக்கு கடன் வாங்கி செலவு செய்து போஸ்டர் அடித்து பிரதமரின் பிறந்தநாளை கொண்டாடினார்களாம்… திட்டமிட்டே தொண்டர்கள், பிரிவு பொறுப்பாளர்களுக்கு தகவல் கொடுப்பதில்லை என மாவட்ட நிர்வாகிகள் மீது குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால் கடும் அதிருப்தியில் உள்ளவர்கள் மாவட்ட நிர்வாகிகள் மீது பெட்டிஷன் தயார் செய்து மாநில நிர்வாகிகளை நேரில் சந்தித்து கொடுக்க தயாராகி வருகின்றார்களாம்.. இதில் சில பேர் மாற்று கட்சிக்கு தாவ ரகசியமாக ஆலோசனை நடத்தி வருகின்றார்களாம்… வடக்கு, தெற்கு மாவட்டம், மாநகர வடக்கு, தெற்கு என 4 ஆக பிரிக்கப்பட்டதில் இருந்து மாவட்ட நிர்வாகிகளுக்குள் ஈகோ பிரச்சனை இருந்து வருகிறதாம்… இதனால் நெற்களஞ்சிய மாவட்டத்தில் தாமரை கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் கட்சியே காணாமல் போக வாய்ப்புள்ளதாக சொந்த கட்சிக்குள்ளே அரசல் புரசலாக பேசிக்கிறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நகராட்சி நிர்வாகத்தில் குறிப்பிட்ட சமுதாய ஆதிக்கம் இருக்கிறதா புகார் வருதே…’’ ‘‘உண்மைதான்..சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனராம். இதனால், அந்த சமுதாயத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள் மட்டுமே தாங்கள் கேட்கும் இடத்துக்கு பணிமாற்றம் வாங்கிவிட்டு செல்லும் நிலை உள்ளது. அவர்கள் எந்த தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லையாம். இதனால் பலருக்கு சலுகைகள், பணியிடமாற்றம் கிடைப்பதில்லை. அதையும் மீறி, சிலர் சலுகையை பெற்றாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது பொய்யான கோப்புகளை தயார் செய்து அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க அந்த சமுதாயத்தினர் செயல்வடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தில் மட்டும் குறிப்பிட்ட சிலருக்கு முக்கியத்துவம் அளிப்பது நகராட்சி, மாநகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகளிடம் பெரும் அதிர்ச்சியும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. துறை அமைச்சர் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா. …
The post 100 ஏக்கர் சுருட்டிய மாஜி ‘துணை’யின் நெருக்கமானவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.