டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு தமிழ்நாட்டில் 1.60 லட்சம் பேர் எழுதினர்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட 90 பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். தேர்வு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை கலெக்டர் 16 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி)-23, வணிகவரித்துறை உதவி ஆணையர்-14, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 21, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி-1 என 90 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 28ம் தேதி வெளியிட்டது. இதையடுத்து இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினியரிங், டாக்டர் என பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். இந்த நிலையில் குரூப் 1 முதல்நிலை தேர்வு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 797 மையங்களில் நடத்தப்பட்டதில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 973 பேர் எழுதினர்.

சென்னையில் மயிலாப்பூர், ராயப்பேட்டை, தி.நகர், கே.கே.நகர், அண்ணாநகர், எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், சைதாப்பேட்டை, திருவான்மியூர் உள்ளிட்ட 124 தேர்வு அறைகளில் 37,891 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். காலை 9.30 மணிக்கு தொடங்கி, பகல் 12.30 மணிக்கு தேர்வு முடிந்தது. எழுத்து தேர்வில் பொதுஅறிவில் 175 வினாக்களும், திறனறிவு தேர்வில் 25 வினாக்கள் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. வினாக்கள் அனைத்தும் அப்ஜெக்டிவ் வடிவில் இடம் பெற்றிருந்தது. ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணிக்குதான் தேர்வு என்றாலும் காலை 7 மணி முதலே தேர்வு எழுதுபவர்கள் ஆர்வமுடன் தேர்வுக் கூடத்திற்கு வர தொடங்கினர். தேர்வு மையங்களில் செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மோதிரம் அணிந்து வரவும் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தேர்வு முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடந்தது. சென்னையில் டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் ஆகியோர் பார்வையிட்டனர். தேர்வு அனைத்து மையங்களிலும் அமைதியாக நடந்தது. தேர்வுக்காக சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த மாணவர்கள் தேர்வு எளிதாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர். குரூப் 1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுவோர் அடுத்தகட்டமாக மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தற்போது தேர்வு எழுதியவர்கள் அடிப்படையில் 1 பதவிக்கு 1,777 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மெயின் தேர்வில் பங்கேற்க கட் ஆப் மதிப்பெண்கள் உயரும் நிலை ஏற்படும்.

 

The post டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு தமிழ்நாட்டில் 1.60 லட்சம் பேர் எழுதினர் appeared first on Dinakaran.

Related Stories: