கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி

மேட்டூர், டிச.7: கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனம் சார்பில், அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 2 நாட்கள் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி நடைபெற்றது.

மேட்டூரில் உள்ள கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்நிறுவனத்தை சுற்றியுள்ள கிராமங்களில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி, வாழ்க்கை வழிகாட்டி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. வைதீசுவரா மேல்நிலைப்பள்ளி, புதுச்சாம்பள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளி, கோனூர் அரசு உயர்நிலைப்பள்ளி, குஞ்சாண்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் பொதுத்தேர்வை எதிர்கொள்வது எப்படி, திறன் மேம்பாடு, நினைவாற்றலை மேம்படுத்துதல், மனநல ஆலோசனை மற்றும் சரியான மேல்நிலைப்படிப்பை தேர்ந்தெடுத்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது.  இப்பயிற்சி வகுப்புகளுக்கு கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் கஜேந்திரன் தலைமை வகித்தார். உதவி துணைத்தலைவர் மதிவாணன் முன்னிலை வகித்தார். சென்னை டான் பாஸ்கோ வழிகாட்டி நிறுவனத்தினர் பயிற்சி அளித்தனர். கெம்ப்ளாஸ்ட் நிறுவன தகவல் தொடர்பு அலுவலர் இமல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: