கொரோனா நோயாளிகளின் உடல்களை உடனுக்குடன் தகனம் செய்வதை கண்காணிக்க தனி குழு அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: கொரோனாவால் இறந்த நோயாளிகளின் உடல்களை உடனுக்குடன் தகனம் செய்வதை கண்காணிக்க தனிக்குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு அளிக்கும்படும் சிகிச்சைகள் குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் மருத்துவமனையில் நடைபெறும் அன்னாதானம் திட்டத்தையும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, முதல்வர் தேரணிராஜன் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:  10 பேருந்துகளில் ஆக்சிஜன் வசதிகளுடன்கூடிய படுகைகளை அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக தகனம் செய்யப்படுவதை கண்காணிக்க தனி குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆம்புலன்சில் வருபவர்களுக்கு உடனே முதலுதவி சிகிச்சை  அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1600 படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 1,230 தீவிர சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்சில் வரும் நோயாளிகள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கு ஏற்றார் போல் மருத்துவமனையின் முதல்வர் மூன்று நாட்களுக்குள் தயார் செய்வதாக கூறியுள்ளார். கோவிட்-19க்கு சிகிச்சை அளிக்கப்படும் நேரத்தில் மற்ற நோய்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். ஊரடங்கு முறையாக பின்பற்றினாலே இந்த மாதத்திற்குள் கொரோனாவை ஒழித்து விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: