விநாடிக்கு 7,000 கனஅடி வீதம் வருகிறது கர்நாடகம் திறந்துவிட்ட தண்ணீர் மேட்டூர் அணை வந்து சேர்ந்தது

மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, ேகஆர்எஸ் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக அரசு கடந்த 16ம் தேதி நள்ளிரவில் கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து விநாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்தது. அதன் பின்னர் கடந்த 18ம் தேதி நீர் திறப்பு 8,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு கடந்த  20ம் தேதி வந்தது. அப்போது, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1,000 கனஅடியாக  இருந்தது.  இதனிடையே கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு 10,000 கனஅடியாக  அதிகரிக்கப்பட்டது. இதனால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக உயரத்தொடங்கி நேற்று முன்தினம் மதியம் 4,000 கனஅடியாக அதிகரித்தது. பின்னர் மாலை  3 மணி நிலவரப்படி விநாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில் நேற்று  காலை 7,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து,  மதியம் 2 மணி நிலவரப்படி 8,000 கன அடியாக அதிகரித்தது.

இதனிடையே நேற்று அதிகாலை அடிப்பாலாறுக்கும், காலை 7 மணிக்கு மேட்டூர் அணைக்கும் தண்ணீர் வந்து சேர்ந்தது. மேட்டூர் அணைக்கு தொடக்கத்தில் விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, பிற்பகல் 3 மணிக்கு விநாடிக்கு 7,000 கனஅடியாக அதிகரித்தது. திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் கோட்டையூர், பண்ணவாடி, செட்டிப்பட்டி பரிசல் துறைகளில் பாதுகாப்பு கருதி, பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நீரில் ஏராளமான மரங்கள் வனப்பகுதியில் இருந்து அடித்து வரப்பட்டன. காவிரி கரையோர மக்கள் அந்த மரங்களை விறகுக்காக இழுத்துச்சென்றனர். காவிரி கரையோரங்களில் அமைக்கப்பட்டிருந்த மீனவர் முகாம்களை அவசர அவசரமாக காலி செய்து மேடான பகுதிக்கு மாற்றினர். தொடர்ந்து அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணை நீர்மட்டம் 39.13அடியாகவும், நீர் இருப்பு 11.64 டிஎம்சியாகவும் உள்ளது. புதுநீர் வரவு காரணமாக மீன்கள் மயங்கி கரை ஒதுங்கின. ஏராளமான மீன்களை மீனவர்களும், கரையோர கிராம மக்களும் அள்ளிச்சென்றனர். நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால், குறுவை சாகுபடியில் பாதித்த டெல்டா பாசன பகுதிக்கு, இம்மாத இறுதியில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை

கர்நாடக அணைகளில் 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று பிற்பகல்  2 மணியளவில் 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட கலெக்டர் மலர்விழி தற்காலிகமாக தடை விதித்துள்ளார். இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Related Stories: