வரி செலுத்துவோர் அதிகரிப்பால் எஸ்ஜிஎஸ்டி வருவாய் 24 ஆயிரம் கோடி : வணிகவரித்துறை அதிகாரி தகவல்

சென்னை: வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பால் வணிகவரித்துறைக்கு 2018-19ல் 24 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று வணிகவரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாடு முழுவதும் கடந்த 2017ல் ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. இந்த வரி அமலால் மாநில வருவாயில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனாலும் ஜிஎஸ்டி வரியை மாநில அரசு அமல்படுத்தியது. இந்த நிலையில், ஆல்கஹால், பெட்ரோல் வரி விதிப்பின் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டி இழப்பை சரி செய்யலாம் என்று மாநில அரசுகள் எண்ணியது. அதன்படியே, கடந்தாண்டில் 73,148 கோடி வருவாய் இலக்கை எட்டியது. இதில், எஸ்ஜிஎஸ்டி (மாநில சரக்குகள் சேவை வரி மூலம்) 16,199 கோடியும், ஐஜிஎஸ்டி மூலம் 7402 கோடி மட்டுமே வரி வருவாய் கிடைத்தது. மது மூலம் மட்டும் 36 ஆயிரம் கோடி எட்டியது. இதனாலேயே கடந்த 2016-17யை காட்டிலும் 5 ஆயிரம் கோடி கூடுதலாக வருவாய் இலக்கை அடைய முடிந்தது.

இந்த நிலையில், இந்தாண்டு வணிக வரித்துறை வருவாய் இலக்கு கடந்த 2017-18யை காட்டிலும் 2018-19ல் கூடுதலாக வருவாய் எட்டுமா என்ற சந்தேகம் எழுந்தது. எனவே தான், வணிவகரித்துறை சார்பில் 2018-19ம் ஆண்டுக்கான இலக்கு நிர்ணயிக்கப்படவில்லை. இந்த நிலையில், மாநில சரக்குகள் சேவை வரி மூலம் 24,509 கோடி வருவாய் கிடைத்துள்ளது. குறிப்பாக, சென்னை வடக்கு மண்டலம் 756 கோடியும், சென்னை தெற்கு 1968 கோடியும், சென்னை கிழக்கு 1820 கோடியும், சென்னை சென்ட்ரல் 1949 கோடியும், திருச்சி 985 கோடியும், வேலூரில் 379 கோடியும், மதுரை 427 கோடியும், நெல்லை 441 கோடியும், கோவையில் 1319 கோடியும், சேலம் 1030 கோடி, அதிகபட்ச வரிசெலுத்துவோர் பிரிவு (large tax payer Unit) 3,012 கோடியும், சிபிஐசி (central board of indirect taxes and customs) 10,393 கோடி என மொத்தம் 24,509 கோடி வரிவருவாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்தாண்டை காட்டிலும் 8 ஆயிரம் கோடி கூடுதலாக வரி வருவாய் கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது. இதற்கு, வணிக வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் வரி வருவாய் அதிகரித்துள்ளளது தெரிவித்துள்ளது. இருப்பினும் கடந்த 2018-19ல் மது, எரிபொருள் மூலம் 40 ஆயிரம் கோடிக்கு மேல் வரி வருவாய் கிடைத்துள்ளது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: