ஒகேனக்கல் வனப்பகுதியில் குட்டிகளுடன் 50 யானைகள் முகாம் : சாலையில் சுற்றி வருவதால் மக்கள் பீதி

பென்னாகரம்: ஒகேனக்கல் வனப்பகுதியில், குட்டிகளுடன் 50க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளது. மேலும் சாலையில் கூட்டமாக சுற்றி வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். கர்நாடக வனப்பகுதியில் இருந்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன் 50க்கும் மேற்பட்ட யானைகள், அங்கிருந்து உணவைத்தேடி, ஒகேனக்கல் வனப்பகுதிக்கு வந்தன. இந்த யானைகள், ஏற்கனவே அங்குள்ள 30 யானைகளுடன் சேர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளன. இவை அவ்வப்போது, வனப்பகுதியை விட்டு, பென்னாகரம்ஒகேனக்கல் சாலையை கடந்து அருகில் உள்ள கிராமங்களில் நுழைவது வாடிக்கையாக உள்ளது.  

இந்நிலையில், நேற்று மதியம் ஒகேனக்கல் வனப்பகுதியில் ஏராளமான குட்டிகளுடன் 20க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக வந்தன. அவை அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலை சுற்றி உள்ள மரங்களில் கிளைகளை முறித்து சாப்பிட்டது. தொடர்ந்து தண்ணீர் குடிப்பதற்காக ஒடப்பட்டி சாலையை, 20க்கும் மேற்பட்ட யானைகள், குட்டிகளுடன் கடந்தது சென்றது. இதை அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். ஆர்வம் மிகுதியால் சிலர் செல்போனில் படம் பிடித்தனர். சிலர் யானைகள் இருப்பதை கண்டு திரும்பி சென்றனர். இது குறித்த தகவலின் பேரில், விரைந்து வந்த வனத்துறையினர் யானைகள் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக பென்னாகரம்ஒகேனக்கல் சாலையை யானைகள் கடந்து செல்வது வழக்கமாக உள்ளது. நேற்று மதியம் கூட, 20க்கும் மேற்பட்ட யானைகள் சாலையை கடந்து சென்றன. மேலும், அப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் இரவு நேரங்களில் உணவுக்காக ஒகேனக்கல் சாலையோரங்களில், உள்ள மரக்கிளைகளை முறித்து சாப்பிட்டு வருகிறது. இதை காணும் சுற்றுலா பயணிகள் பீதி அடைகின்றனர். எனவே இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: