தமிழக கோவில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக கோவில்களில் உள்ள  ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என இந்து அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பாலிதீர்த்தம் அருகே உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலின் துணை கோயிலான அருள்மிகு பக்த மார்க்கண்டேய கோயிலில் உள்ள சிலைகள் அகற்றப்பட்டு கோயிலை முழுமையாக இடித்துவிட்டு இந்த கோயிலை ரமேஷ், வெங்கடேசன் உட்பட 9 பேர் ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2015 ஆண்டு ஒவ்வொரு பகுதியாக ஆக்கிரமித்தவர்கள் தற்போது கோயிலை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டதாகவும் கோயிலை முழுமையாக அகற்றிவிட்டு அங்கு புதிதாக கட்டிடம் கட்டி தேநீர் விடுதிகள் நடத்தி வருவதாகவும் இதுதொடர்பாக புகாரை பதிவு செய்த திருவண்ணாமலை காவல்துறையினர் முறையாக விசாரிக்கவில்லை எனவும் எனவே வழக்கை வேறு அமைப்பிற்கு மாற்ற வேண்டும் சிபிஐ, அல்லது சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனவும் கோரி சிவபாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கட்டிடத்தை முழுமையாக இடித்துவிட்டு அந்த இடத்தில் சிலையுடன் கூடிய புதிய கோயிலை கட்ட வேண்டும் எனவும் மற்றொரு வழக்கும் தொடர்ந்திருந்தார். இந்த 2 மனுக்களின் மீதான விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது கோயில் ஆக்கிரமிப்பாளர்கள் மீதான வழக்கில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள் கடந்த 2015 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் உரிய முறையில் எந்த நடவடிக்கையும் எடுக்காததது குறித்து அதிருப்தி தெரிவித்தனர். மேலும் இந்த விஷயத்தில் மெத்தனமாக செயல்பட்ட காவல்துறையினரை ஏன் சஸ்பெண்ட் செய்யக்கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த கோயில் ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக கைது செய்தும் இதுகுறித்து திருவண்ணாமலை டி.எஸ்.பி நேரில் ஆஜராகி அடுத்த விசாரணையின் போது விளக்கமளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த உத்தரவு என்பது திருவண்ணாமலை கோயிலுக்கு மட்டும் அல்ல எனவும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையில் பழங்கால சிலைகளை பதுக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி தொழிலதிபர்கள்  ரன்வீர் ஷா மற்றும் கிரண்ராவ் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை அடுத்த வாரம் புதன் கிழமைக்கு தள்ளி வைப்பதாகவும் அன்று இந்த வழக்கில் தீர்ப்பளிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்து உத்தரவிட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: