கஜா புயலை எதிர்கொள்ள அதிகாரிகள் மருத்துவக்குழு, இயந்திரங்கள் தயார்: அமைச்சர் உதயகுமார் விளக்கம்

சென்னை: `கஜா’’ புயலை எதிர்கொள்ள தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று சென்னை, எழிலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:`கஜா’ புயல் படிப்படியாக தீவிரம் குறைந்து தமிழக கடற்கரை பகுதியான கடலூர் மற்றும் பாம்பன் இடையே நாளை முற்பகல் புயலாக கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தென்தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பெய்ய கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கஜா புயலை எதிர்கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் நேற்று முன்தினம் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அவரின் உத்தரவுப்படி கடலோர மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆயத்த பணிகளை நேற்று முதல் மேற்கொண்டுள்ளனர். வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், கடலோர மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது ஆலோசனை வழங்கி வருகிறார்.

அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் முழுஅளவில் தண்ணீர் நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளின் கீழ் தளத்திலுள்ள ஜெனரேட்டர்களை உயர்ந்த இடங்களிலும் வைக்கவும், போதிய ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இருப்பில் வைக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளன.புயல் கரையை கடந்த பின்பு, சுகாதார பணியாளர்கள் சாலைகளில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும், மின்கம்பங்களை சரி செய்யும் வழிவகை செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு போதிய படகுகள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் கடலில் குளிக்கவோ மற்ற பொழுது போக்கு செயல்களில் ஈடுபடவோ கூடாது. பொதுமக்களும் பயணங்களை தவிர்க்க வேண்டும். இந்திய வானிலை ஆய்வு மையம் அளிக்கும் எச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் கடலோர மக்களுக்கு தெரிவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது, வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் உடனிருந்தனர்.

மீட்பு குழு விவரம்அமைச்சர் உதயகுமார் மேலும் கூறுகையில், தமிழக கடலோர மாவட்டங்களில் 2,559  பாதிக்கப்படக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு 410 பல்துறை அலுவலர்களை கொண்ட மண்டல குழுக்கள் தீவிர கண்காணிப்பு

பணிகளில்  ஈடுபட்டுள்ளனர். மீட்பு குழுவினர் 7158 பெண்கள் உட்பட 22,495 தயார் நிலையில் உள்ளனர். சென்னை 1, கடலூர் 1, ராமநாதபுரம் 1, சிதம்பரம் 2, நாகப்பட்டினம் 3 என 8 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவில் 25 பேர் இருப்பார்கள். அதேபோல், சென்னை 1, கடலூர் 1, நாகப்பட்டினம் 2 என 4 மாநில பேரிடர் மீட்பு குழுக்களும்  அனுப்பப்பட்டுள்ளனர் என்றார்.

ரெட் அலர்ட் இல்லை

வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறியதாவது, `கஜா’ புயல் காரணமாக தமிழகத்துக்கு தற்போது `ரெட் அலர்ட்’ எதுவும் விடுக்கப்படவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையம் 4 கலர் கோடு பயன்படுத்துகிறார்கள். பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு. இதற்கு என்ன அர்த்தம் என்றால், எந்த அளவுக்கு மழை பெய்யும் என்று அறிவிக்கத்தான் இந்த கலர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதை தவறாக புரிந்து கொண்டு `லெட் அலர்ட்’’ என்ற தகவல் வெளியாகி வருகிறது. இந்த செய்தி, அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வழக்கமான தகவல்தான். ஆனால் இது பொதுமக்களுக்கு பொருந்தாது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: